Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
May 23, 2013 [GMT]

  • Welcome
  • Welcome
விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் தமிழர் தாயகம் மோசமான நில ஆக்கிரமிப்புக்கு இரையாகி வருகின்றது! நக்கீரன்
[Wednesday, 2012-07-04 09:45:10]

கடந்த மாத இறுதியில் சிறீலங்காவுக்கு இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் வருகை தந்திருந்தார். இந்திய பாதுகாப்பு ஆலோசகர் பதவி என்பது அமைச்சரவை அமைச்சர் ஒருவரது பதவிக்கு ஒப்பானது. அவரது வருகைக்கு இரண்டு முக்கிய காரணங்கள் சொல்லப்பட்டன.


  

ஒன்று கடந்த ஏப்ரில் 16 இல் சிறீலங்காவுக்கு இந்திய மக்களவை நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையில் 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு செலவு மேற்கொண்டிருந்தது. சிறீலங்காவில் 6 நாள்க்களைச் செலவழித்த இந்திய நாடாளுமன்றக் குழுவின் தலைவி தில்லி திரும்பியதும் ஒரு அறிக்கையைப் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கையளித்திருந்தார். அதில் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் மீளிணக்க ஆணையத்தின் (எல்எல்ஆர்சி) பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தல், வடமாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்த வேண்டிய அவசியம், இராணுவ இருத்தலைக் குறைத்தல், சிவில் நிருவாகத்தை மீள் கொண்டுவருதல், உயர் பாதுகாப்பு வலயங்களை ஒழித்து தனியார் காணிகளை உரிமையாளர்களிடம் ஒப்படைத்தல் போன்றவை உள்ளடக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்தே பிரதமர் மன்மோகன் சிங் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனை சிறீலங்காவுக்கு அனுப்பி வைத்தார் என நம்பப்படுகிறது.

சிவசங்கர் மேனன் அரச தரப்பில் சனாதிபதி மகிந்த இராசபக்சே, பொருண்மிய மேம்பாட்டு அமைச்சர் பசில் இராசபக்சே மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய இராசபக்சே ஆகியோரையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனையும் சந்தித்துப் பேசினார்.

இராசபக்சே உடன்பிறப்புக்களை மட்டும் சிவசங்கர் மேனன் சந்தித்துப் பேசியது ஆட்சி அதிகாரம் ஒரு குடும்பத்தின் கையில் இருக்கிறது என்பதை எடுத்துக் காட்டியது. வெளியுறவு அமைச்சர் ஜி.எல். பீரிஸ் ஓரங்கட்டப்பட்டது அவருக்குப் பெரிய அவமானமாகும். ஆனால் அமைச்சர் பீரிஸ் மான அவமானம் பார்க்கும் ஒருவர் இல்லை என்பது தெரிந்ததே.

இரண்டு, எதிர்வரும் நொவெம்பர் மாதம் மனித உரிமைப் பேரவையின் அமர்வு ஜெனீவாவில் நடைபெற இருக்கிறது. இந்த அமர்வில் 192 அய்.நா நாடுகளது மனித உரிமை முன்னேற்றம் பற்றி மீளாய்வு (Universal Periodic Review (UPR) செய்யப்படும். இந்த மீளாய்வு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை செய்யப்படுகிறது. சிறீலங்காவின் மனித உரிமை நிலை பற்றிய மீளாய்வுக்குப் பொறுப்பாக மூன்று நாடுகள் - இந்தியா, பெனின் மற்றும் இஸ்பானியா - இருக்கும்.

ஜெனீவாவில் இந்தியா எடுக்கும் நிலைப்பாடு முற்றிலும் சிறீலங்கா எடுக்கும் நடவடிக்கையில் முற்றிலும் தங்கி இருக்கும் என சிவசங்க மேனன் எச்சரிக்கும் தொனியில் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு மார்ச்சு 22 இல் அய்நாமஉபே இன் 18 ஆவது அமர்வில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களித்தது. இதனை சிறீலங்கா சற்றும் எதிர்பார்க்கவில்லை. தீர்மானத்துக்கான இந்தியாவின் ஆதரவு சிறீலங்காவுக்கு அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. இதன் பின்னர் இந்திய - சிறீலங்கா உறவில் ஒரு மறைமுக முறுகல் நிலை காணப்படுகிறது. இந்தியாவைப் பழிவாங்கும் போக்கை சிறீலங்கா அரசு மேற்கொண்டு வருகிறது. போர்க்காலத்தில் இரண்டு நாடுகளுக்கும் இடையில் நிலவிய கருத்தொற்றுமை, ஒருத்தருக்கு ஒருவர் ஆதரவு, ஒத்துழைப்பு, நட்பு இப்போது இல்லை என்றே சொல்லலாம்.

ஆனால் போகிற போக்கைப் பார்த்தால் சிறீலங்கா அரசுக்கு எல்எல்ஆர்சி அறிக்கையை அக்கறையோடு நடைமுறைப்படுத்தும் எண்ணம் இருப்பதாகத் தெரியவில்லை. கடந்த 3 மாதங்களாக எல்எல்ஆர்சி அறிக்கை பற்றி சிறீலங்கா அரசு எந்தவொரு நடவடிக்கையையும் எடுத்ததாகத் தெரியவில்லை. பன்னாட்டு சமூகத்தின் அழுத்தத்துக்குத் தாம் அடிபணியப் போவதில்லை என்று அமைச்சர் பிரதானிகள் பேசி வருகிறார்கள். பன்னாட்டு சமூகத்தின் அழுத்தம் எதுவாகினும் அதனைச் சமாளிக்கலாம் என அவர்கள் நம்புகிறார்கள். இதன் காரணமாகவே சிறீலங்கா அரசு எல்எல்ஆர்சி அறிக்கையை இந்தப் பொழுது வரை சிங்கள - தமிழ் மொழிகளில் மொழிபெயர்கப்படவில்லை. மொழிபெயர்ப்பாளர்களது பற்றாக்குறை ஒரு காரணம் எனச் சொல்லப்படுகிறது. ஆனால் அது நம்பும்படியாக இல்லை. மொத்தம் 388 பக்கங்களைக் கொண்ட ஒரு அறிக்கையை அரச மொழிபெயர்ப்பாளர்களால் எளிதில் மொழி மாற்றம் செய்யமுடியும்.

வடமாகாண சபைக்கான தேர்தல் அடுத்த ஆண்டு செப்தெம்பரில் நடைபெறும் என பொருளாதார மேம்பாட்டு அமைச்சர் பசில் இராசபக்சே தெரிவித்துள்ளார்.

கால தாமதத்துக்கான காரணங்களையும் சொல்லியிருக்கிறார். முதலாவது வடக்கில் கண்ணிவெடிகள் இன்னும் முற்றாக அகற்றப்படவில்லை. இரண்டாவதாக இடம்பெயர்ந்த மக்கள் எல்லோரையும் மீள் குடியமர்த்த வேண்டும். மூன்றாவதாக போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியா கட்டிக் கொடுக்கும் 50,000 வீடுகள் கட்டிமுடிக்கப்பட வேண்டும்.

இந்தக் காரணிகள் நொண்டிச் சாட்டுக்கள் என்பது எளிதில் புரியும். மே 19, 2009 க்குப் பின்னர் சனாதிபதி தேர்தலை ( சனவரி 26, 2010) வைக்க முடியுமென்றால், ஏப்ரில் 2010 இல் நாடாளுமன்றத் தேர்தலை வைக்க முடியுமென்றால், கடந்த ஆண்டு வட - கிழக்கில் உள்ள இரண்டு பிரதேச சபைகள் நீங்கலாக ஏனையவற்றுக்கு தேர்தல் வைக்க முடியுமென்றால் வட மாகாண சபைக்கான தேர்தலை மட்டும் ஒத்திப்போடுவதன் நோக்கம் என்ன?

மேலும் கிழக்கு மாகாண சபை, வட மத்திய மாகாண சபை மற்றும் சப்புரகமுவ மாகாண சபை ஆகியவற்றை அவற்றின் பதவிக் காலத்துக்கு முன்னரே கலைத்து விட்டு பலத்த பொருட்செலவில் (உரூபா 500 மில்லியன்) தேர்தலை வைப்பதன் மர்மம் என்ன?

வட மாகாண சபைக்குத் தேர்தல் வைக்காததற்குக் காரணம் கண்ணிவெடி அகற்றுவதில் உள்ள காலதாமதம் என்பது ஒரு நொண்டிச் சாட்டென்று சொன்னோம். உண்மையில் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் இதுவரை 120 சகிமீ நிலப்பரப்பில் மட்டுமே நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்படாது உள்ளதாக சிறிலங்கா இராணுவம் தெரிவித்துள்ளது.

போர் இடம்பெற்ற காலப்பகுதியில் 1,941 சகிமீ நிலப்பரப்பில் நிலக்கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளதாகவும் இதுவரையில் 1,821 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பில் நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்பட்டுள்ளதாகவும் பதில் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜீ.வி.ரவிப்பிரிய தெரிவித்திருக்கின்றார்.

எஞ்சியுள்ள நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் பணிகள் தற்போது இடம்பெற்றுவருவதாகவும் இடைக்கிடையே மழை பெய்வதால் நிலக்கண்ணி வெடிகள் அகற்றும் பணிகள் தடைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வட மாகாண சபைக்குத் தேர்தல் நடத்தினால் இப்போது சிங்கள இராணுவம் மேற்கொண்டுள்ள மண்பறிப்புக்கு இடைஞ்சலாக இருக்கும் என்று மகிந்த அரசு அஞ்சுகிறது. சிவில் நிருவாகத்தை முடக்கிவிட்டு இராணுவ ஆட்சி தொடர்வதே சிங்கள மயமாக்கல் மற்றும் பவுத்த மயமாக்கல் இரண்டுக்கும் வசதியாக இருக்கும் என மகிந்த அரசு நம்புகிறது.

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெறுவதையும் இராணுவம் மற்றும் கடற்படைத் தளங்கள் அமைப்பதற்குத் தனியார் காணிகள் அபகரிகப்படுவதையும் தாங்கிய செய்திகள் தொடர்ந்து வந்தவண்ணம் உள்ளன.

சாவகச்சேரியில் அமைந்தள்ள காவல் நிலையத்துக்கு முன்பாக நீண்டகாலமாக இருந்த இந்துக் கோவிலின் ஒருபகுதியை இடித்துவிட்டு அதன் அருகில் உள்ள அரசமரத்தின்கீழ் விசாலமான புத்தர் கோயில் ஒன்று துரிதமாக அமைக்கப்பட்டுவருகின்றது. இதனை சிங்கள காவல்துறையினரே முன்னின்று செய்கிறார்கள்.

இதுவரை காலமும் பொதுமக்கள் நடமாட்டம் அற்ற பகுதிகளிலும் இராணுவம் மற்றும் காவல் நிலையங்கள் உள்ள பகுதிகளிலும் சிறு புத்தர் சிலை அமைத்து அவர்களுடைய வழிபாட்டுக்குப் பயன்படுத்தப்பட்டு வந்தது. அதன் பின்னர் பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகளைக் கைப்பற்றி இவ்வாறான புத்தர் சிலைகள் அமைக்கப்பட்டு வந்தது.

ஆனால் தற்போது வழிபாடுசெய்துவரும் இந்துக் கோயிலொன்று உடைக்கப்பட்டு அக்கோயில் அமைந்திருக்கும் இடத்தில் புத்தகோயில் அமைக்கப்படுகிறது. இது இந்து சமயத்தினை இழிவுபடுத்தும் அதேவேளை பவுத்த பேரினவாதத்தின் கட்டு மீறிய வெறித்தனத்தைக் காட்டுகிறது.

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள ஈச்சிலம்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சீனன் வெளி பகுதியில் கடற்கரையோரமாக அமைந்துள்ள பொதுமக்களுக்குச் சொந்தமான 20 ஏக்கர் காணியை ஆக்கிரமித்து சிறீலங்கா கடற்படை முகாம் அமைத்துள்ளது. இதனால் காணிச் சொந்தக்காரர்கள் தமது காணிகளில் குடியிருக்கவோ பயிர்ச் செய்கையில் ஈடுபடவோ முடியாதநிலை ஏற்பட்டுள்ளதாக உரிமையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இந்தக் கடற்படை முகாம் அமைக்கப்பட்டுள்ள காணிகள் தோப்பூர் பிரதேச முஸ்லிம் மக்களினதும் சீனன் வெளி பிரதேச தமிழ் மக்களினதும் காணிகளாகும்.

குடாநாட்டில் தனியார் காணிகள் மற்றும் கட்டிடங்கள் 1000 கும் அதிகமான இடங்களில் இராணுவம் நிலை கொண்டுள்ளது.

இராணுவம் இவ்வாறு நிலை கொண்டுள்ள தென்மராட்சிப் பிரதேசத்தில் 300 ஏக்கர் நிலத்தையும் தெல்லிப்பளை பிரதேசத்தில் 61 ஏக்கர் நிலத்தையும் கைப்பற்றுவதற்கு இராணுவம் முயற்சி செய்து வருவதாக வெளிவந்த செய்தியினால் மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.

தற்போது யாழப்பாண மாவட்டத்தில் வீட்டுடன் இணைந்த காணிகள் 57 இலும் 5 வெற்றுக் காணிகளிலும் அரச காணி 1 இலும் வியாபார நிறுவனம் 1 இலும் காவற்றுறையினர் குடிகொண்டுள்ளனர்.

இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் 716 காணிகள் உள்ளதாக கருதப்படுகிறது. இதில் வீட்டுடன் இணைந்த 378 காணிகளும் 283 வெற்றுக் காணிகளும 9 அரச காணிகளும் 46 வணிக நிறுவனங்களும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன.

கடற்படையினரின் கட்டுப்பாட்டில் மொத்தம் 253 காணிகள் உள்ளதாக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. இதில் வீட்டுடன் 123 இணைந்த காணிகளும் 104 தனியார் காணிகளும் 19 அரச காணிகளும் 7 வியாபார நிறுவனங்களும் கடற்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளன.

அரசியலுக்கு அப்பால் இராணுவ மயப்படுத்தல், சிங்கள மயப்படுத்தல், பவுத்த மயப்படுத்தல் ஆகியவற்றுக்கு எதிராக அதி வணக்கத்துக்குரிய மன்னார் மறை மாவட்ட பேராயர் இராயப்பு யோசேப் அடிகளாரே ஓங்கிக் குரல் கொடுத்துவருகிறார். இதனால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

போர் முடிந்து விட்டதாகக் கூறப்பட்ட போதும் தமிழ் மக்களுக்கு எதிராக ஒரு முழுமையான போர் தற்பொழுது தொடக்கி வைக்கப்பட்டுள்ளது என்பதைத் தற்போது நடைபெறும் மண் பறிப்பு உறுதிப்படுத்துகின்றன என்று கொழும்பிலிருந்து வெளிவரும் முக்கிய தமிழ் வார செய்தித்தாளுக்கு வழங்கிய சிறப்புச் செவ்வியில் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் தாம் திறந்தவெளிச் சிறைச்சாலையில் வாழ்வதாகத் தெரிவித்த கருத்துடன் நூற்றுக்கு நூறு விழுக்காடு தாமும் உடன்படுவதாக தெரிவித்த பேராயர் அவர்கள் தமிழ் மக்களுக்கு எதிரான தற்போதைய போரானது தமிழ் மக்களின் இன அடையாளத்தை அழித்து ஒழிப்பதும் அவர்களின் தன்மானத்தை, பாதுகாப்பை, அரசியல் இருப்பை சிதைத்து விடும் நோக்குடனேயே இந்தப் போர் தமிழ் மக்களுக்கு எதிராக உத்தியோகப் பற்றற்ற முறையில் பிரகடனப்படுத்தப்பட்டு முன் நகர்த்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

நீர்கொழும்பு, சிலாபம், புத்தளம் போன்ற பகுதிகளை உள்ளடக்கிய பகுதிகளில் வாழ்ந்த தமிழ் மக்கள் இன்று தமிழ் மொழியை மறந்து சிங்களவர்களாக மாறியுள்ளதைச் சுட்டிக்காட்டும் பேராயர் அவர்கள் இதுபோன்றதொரு நிலையை வடக்கு - கிழக்கில் உருவாக்குவதற்கான திட்டங்களே அரசினால் முன் நகர்த்தப்படுகின்றன என்றும் தெரிவித்தார்.

இது பன்னாட்டு நியமங்கள், நீதி இவற்றிற்கு மாறான இனச் சுத்திகரிப்பே என்பதில் எவ்வித கருத்து வேறுபாடுகளுக்கும் இடமில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

(1) பாரம்பரியமாக வாழ்ந்துவரும் மக்களை அவர்களுடைய பிரதேசத்தில் சிறுபான்மையினராக மாற்றும் திட்டத்தை அனுமதிக்கமுடியாது.

(2) சமாதான காலத்தில் படைத்தரப்பைப் பலப்படுத்த வேண்டிய தேவை அதிகளவில் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

(3) சமாதானம் வந்துவிட்டதாகக் கூறுகின்றனர், ஆனால் சமாதானத்தைத் தமிழ் மக்களால் பார்க்க முடியாதிருக்கின்றது.

(4) முள்ளிக்குளத்திலும் பேசாலை 50 வீட்டுத் திட்டத்திலுமிருந்து மக்களைப் படைத்தரப்பு ஏன் விரட்டியடித்தது?

(5) மக்கள் மீளக்குடியமர முடியாதுள்ளது. காடுகளிலும் கூடாரங்களிலும் எவ்வளவு காலத்துக்கு வாழ்வது?

இந்தக் கேள்விகளில் ஒரு கிறித்துவ துறவியின் நியாயமான கோபத்தைப் பார்க்கிறோம். மானிட நீதிக்காகக் குரல் கொடுக்கும் ஒரு அருட் தந்தையின் ஆன்மீகக் குரலைக் கேட்கிறோம்.

மன்னார் மறை மாவட்டப் பேராயர் போல யாழ்ப்பாண மறை மாவட்ட பேராயர் வண தோமஸ் சவுந்தரநாயகம் சிங்கள - பவுத்த இனவாத அரசின் இனவொழிப்புக்கு எதிராகக் குரல் கொடுப்பதாகத் தெரியவில்லை.

நல்லூர் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் பற்றியோ கொழும்பு இந்து மாமன்றத் தலைவர்கள் பற்றியோ கேட்கவே வேண்டாம். சும்மா இருப்பதே சுகம் நமக்கேன் தொந்தரவு என்று வாய் மூடி மவுனிகளாக இருக்கின்றனர்.

சிங்கள - பவுத்த பேரினவாத நிகழ்ச்சி நிரலுக்க எதிராகப் பலமிக்க அரணாக இருந்த விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் மீண்டும் தமிழர் தாயகம் மோசமான நில ஆக்கிரமிப்புக்கு இரையாகி வருகின்றது.

போர்க்காலத்தில் தமிழர்கள் வீடுகளைக் கொளுத்த மகிந்த இராசபக்சேக்கு கொள்ளி கொடுத்த ஆனந்தசங்கரி, சித்தார்த்தன், கருணா, டக்லஸ் தேவானந்தா, பிள்ளையான் போன்றவர்கள் என்ன சொல்கிறார்கள்?

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome
Mahesan supramaniyam 031109
NIRO-DANCE-100213
INNSYS-20120930
TDE_Computers2011
Ramans2011
Canada Kanthasamy Kovil
AJRwindows22.05.13
TamilsGuid-191012-2013
Suresh-remax-2013-01-01
RoyaShades-l2011(04-12-11)
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com