Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
May 24, 2013 [GMT]

  • Welcome
  • Welcome
தமிழ் இளைஞர்களும் அரசின் சதித் திட்டங்களும்.
[Thursday, 2012-07-26 00:26:22]

இவ்வருட ஆரம்பத்தில் இருந்து கடந்த 7 மாதத்தில் 1531 இலங்கையர்கள் அவுஸ்ரேலியாவில் அகதித் தஞ்சம் கோரியுள்ளனர் என்றும் வருட ரீதியாக இதுவரை வந்து சேர்ந்த அகதிகளைவிட இவ்வருடம் 7 மாதங்களில் வந்து சேர்ந்த அகதிகள் அதியுச்சமாக இருப்பதாக பத்திரிகைகளில் தினமும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.


  

இது அவுஸ்ரேலியர்களின் மட்டத்தில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தினாலும் அவுஸ்ரேலியாவில் உள்ள தமிழர்கள் மத்தியில் ஒரு கிலியை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் தமிழர்கள் என்று கூறிக்கொண்டு தஞ்சம் கோரி வருவோரில் பெரும்பான்யானோர் தமிழ் பேசத் தெரிந்த சிங்களவர்களும் முஸ்லீம்களுமேயாவர்.

இவர்கள் எச்சந்தர்ப்பத்திலும் இலங்கையில் நடந்த சிவில் யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அல்லர். என்பது அனைவருக்கும் அப்பட்டமாகத் தெரிந்த உண்மை. இப்படி எந்த விதமான பாதிப்பும் இல்லாதவர்கள் ஏன் இந்த நாட்டில் தஞ்சம் கோருகின்றார்கள் என்ற யோசனையில் இருந்த போது அவுஸ்ரேலியாவிலிருந்து வெளியாகும் சிட்னி மோனிங் கெரால்ட் பத்திரிகையில் 21.07.2012 அன்று ஒரு கட்டுரை ஒன்று பிரசுரமாகி இருந்தது.

அக்கட்டுரையில் தமிழர்கள் ஏன் அவர்களின் கிராமங்களில் இருந்து வெளியேறியுள்ளனர் என்றும் அவர்களது கிராமத்தின் படம் ஒன்றும் போடப்பட்டு, அக்கதைகளைச் சொன்னவர்களின் பெயர்களும் மாற்றப்பட்டு பிரசுரமாகியிருந்தது. இப்படத்தினைக் கூட ஒரு சிங்கள புகைப்பிடிப்பாளரே வழங்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இக்கட்டுரையில் பிரசுரிக்கப்பட்டுள்ள படமும், கட்டுரையின் கதையும் தமிழர்களுக்கும் அவுஸ்ரேலிய அதிகாரிகளுக்கும் சூட்சுமமான முறையில் ஒரு கதையை சொல்கின்றது.

பிரசுரிக்கப்பட்ட படத்தினை உற்று நோக்குவோமாயின், படத்திலுள்ள வீடுகள் கடற்கரையை அண்மித்துக் காணப்படுவதாகவும் 5 அல்லது 6 வருடங்களுக்கு மேல் பழமையான வீடுகள் என்பதும் உறுதியாகின்றது. ஏனென்றால் அந்த வீடுகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. அழகாக கிடுகுகளால் அடைத்து கூரை வேயப்பட்டுள்ளது. அதனை விட கல்வீடுகள் கூட காணப்படுகின்றன.

இது 2009 ஆம் ஆண்டு இறுதிப் போரின் பின்னர் இடம் பெயர்ந்த மக்களுக்கு செய்து கொடுக்கப்பட்ட வீடுகள் போன்று புகைப்படப்பிடிப்பாளர் காட்ட முனைவதாகவே எண்ணத் தோன்றுகின்றது. ஏனென்றால் அவ்வாறு இடம்பெயர்ந்த மக்களுக்கு இவ்வாறான வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படவில்லை. அனைத்து வீடுகளும் தரப்பாளினாலேயே அமைக்கப்பட்டிருந்தன என்பதும் அங்கு மின்சாரம் வழங்கப்படவில்லை என்பதும் உலகறிந்த உண்மை.

அதனை விட இந்த வீடுகள் ஒரு காட்டுப்பகுதியை புல்டோசரால் அழித்து உருவாக்கப்பட்ட கிராம வீடுகள் ஆகும். அப்படி இருக்கும் போது அங்கு கல்வீடுகள் எதுவும் இருக்க வாய்ப்பில்லை.

அதனை விட அக்கட்டுரையில் வரும் பத்திரங்கள் சொல்லும் கதைகள் கூட வித்தியாசமாக அமைந்துள்ளது. அதாவது பெயர் மாற்றிப் பிரசுரிக்கப்பட்டிருந்தாலும் தமிழ் சிங்கள பெயர் வேறுபாட்டினடிப் படையிலேயே பத்திரிகையாளர் பிரசுரித்துள்ளார் என்பது தெளிவாகின்றது.

அதில் வரும் தமிழ்ப் பெயர் கொண்ட நபர் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இப்போதும் நடந்து கொண்டிருக்கும் கொடுமைகளையும் கடத்தல்களையும் விபரித்துள்ளார். இக்கதைகளை இலங்கையிலுள்ள அதிகாரி ஒருவர் ஒருபோதும் தமிழர்களுக்கெதிரான நடவடிக்கைகள் நடந்ததில்லை நடக்கவுமில்லை என்று பத்திரிகையாளர் கேட்ட கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

இவ்வாறான நிலையிலேயே சிங்களப் பெயர் கொண்ட பாத்திரமானவர் தாம் சரியான ஏழைகள் என்றும் தாம் அவுஸ்ரேலியாவில் உழைத்து வீட்டுக்குப் பணம் அனுப்பி தமது குடும்பத்தினரை ஏழ்மையிலிருந்து மீட்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதனை விட அவுஸ்ரேலியாவில் வாழும் உறவினர்களே தம்மை வரும்படி கூறியதாகவும் சொல்லியுள்ளனர். இது அவுஸ்ரேலியாவில் வாழும் தமிழர்களையும் அவுஸ்ரேலிய அரசு மட்டத்தில் எதிர்ப்புக் கருத்துக்களை உருவாக்கும் உத்தியாகவே பார்க்கப்பட வேண்டும்.

இவ்வாறான இந்த அதிகாரியின் கருத்தும் சிங்கள பெயர் கொண்ட அகதி கூறும் கருத்தும் அவுஸ்ரேலியர்கள் மட்டத்திலும் உலகத்தின் முன்பும் ஒரு கருத்தை முன்வைக்க விளைவதாகவே தோன்றுகிறது. அதாவது "இலங்கையில் தமிழர்களுக்கு இப்போது எந்தவிதப் பிரச்சனையுமில்லை. அவர்கள் அவுஸ்ரேலியாவில் தஞ்சம் கோருவது தமது பொருளாதாரத்தை விருத்தி செய்வதற்காகவே" என்பது போன்றுள்ளது.

இதனை அண்மையில் இலங்கைக்கான அவுஸ்ரேலியத் தூதுவரும் முன்னாள் கடற்படைத் தளபதியுமான திசார சமரசிங்கவும் பத்திரிகையாளர்களுக்குத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இலங்கையில் இருந்து படகுகளில் ஆட்களை ஏற்றும் பணியைச் செய்து வருபவர் பெரிய புள்ளி ஒருவரின் மகன் என்பது பலர் கேள்விப்பட்டிருக்கலாம்.

சிலவற்றைச் சிந்திக்கும் போது இவை உறுதிப்படுத்தக் கூடியதாகவே உள்ளது. அதாவது 2009 ஆம் ஆண்டு சிவில் யுத்தம் முடிந்த பின்னரும் இலங்கை அரசு பல மில்லியன் ரூபாய்களை பாதுகாப்புச் செலவுக்காக ஒதுக்கி புலிகளின் மீளமைவைத் தடுக்க முயற்சி எடுத்து வருகின்றது.

அதிலும் இலங்கை பாதுகாப்புச் சபையின் தீர்மானத்தின் படி புலிகள் இலங்கையில் மீளமைவது சாத்தியமில்லை. வேறு ஒரு நாட்டில் ஒருங்கிணைந்து கடல் மார்க்கமாகவே இலங்கைக்கு வந்து சேரமுடியும் என்பதாக இருப்பதால் அவர்கள் கடற்படையை பலப்படுத்தி இலங்கையைச் சுற்றி தீவிர கண்காணிப்பை ஏற்படுத்தியுள்ளனர். இவ்வாறிருக்கும் போது இக்கண்காணிப்புக்களை எல்லாம் மீறி எவ்வாறு இவ்வளவு தொகை கொண்ட படகுகள் வந்துள்ளன என்பதைச் சிந்தித்துப் பார்ப்பவர்களுக்கு அனைத்தும் புரிந்து விடும்.

அதனை விட இந்த ஆட்கடத்தல் வியாபாரமானது மிகவும் பரகசியமாக குறைந்த செலவில் கேட்டுக் கேட்டு ஏற்றிவிடுவதாகவே அறியப்படுகிறது. இதனை விட யாருமே சிந்திக்க முடியாத இன்னும் இரு விடயங்களையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது இலங்கைத் தமிழ் இளைஞர்களுக்கு இவ்வாறான ஆசை காட்டி அவர்களிடம் காசை வாங்கிக் கொண்டு படகினில் ஏற்றிவிடப்படுவோர் பின்னர் ஆட்கடத்தலில் ஈடுபடுவோராலேயே கடற்படையினரிடம் காட்டிக்கொடுக்கப்பட்டு தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இதனால் இவர்களை எந்த வித காரணங்களும் சொல்லாமல் தடுப்பு முகாமில் அடைத்து வைக்கலாம். விளக்கைத் தேடிவந்து விழுந்து சாகும் பூச்சிகளைப் போன்று தமிழ் இளைஞர்கள் ஈர்த்திழுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றனர். இவற்றையெல்லாம் விட அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட மேற்கத்தைய நாடுகள் அனைத்தும் வடமாகாண சபைத் தேர்தலை நடாத்துமாறு இலங்கையரசினை வற்புறுத்திக் கொண்டிருக்கும் வேளையில் அனைத்தையும் தட்டிக்கழிக்க முடியாத நிலையில் இலங்கையரசு தவிக்கின்றது.

வடமாகாணசபைத் தேர்தல் நடாத்தப்பட்டால் அங்கு தமது ஆளும் கட்சி தோல்வியடையப்போவது உறுதிபட அரசுக்குத் தெரியும். அதனால்

1. தமிழ் இளைஞர்களை அங்கிருந்து அகற்றுவதனூடாக அவர்களினது வாக்குக்களை கள்ள வாக்குகளாகப் பயன்படுத்தி தமது அரசின் வெற்றியை உறுதி செய்தல்.

2. தமிழ் இளைஞர்களை நிரந்தரமாக வேறு இடங்களுக்கு அனுப்புவதனூடாக வடமாகாணத்தின் இனப்பெருக்கத்தை குறைத்தல்

போன்ற திட்டங்களுக்குக் கிடைத்த ஒரு வழியே இந்த படகு மூலம் ஆட்களை அவுஸ்ரேலியாவுக்கு அனுப்புதல் ஆகும்.

இரண்டாவது மகிந்த ராசபச்சே இரண்டு தடவைகள் உத்தியோக பூர்வ விஜயமாக லண்டன் சென்ற போதும் அங்குள்ள தமிழர்களால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடாத்தப்பட்டதால் போன விடயத்தை முழுமையாக முடிக்காமல் இடைநடுவில் விட்டு விட்டு அவமானப்பட்டு திரும்பியவர் என்பது அனைவரும் அறிந்ததே.

அங்கிருந்த சிங்களவர்கள் மகிந்தருக்கு ஆதரவாகவும் தமிழர்களுக் கெதிராகவும் ஆர்ப்பாட்டத்தினைச் செய்த போதும் அங்கு அவர்களின் ஆட்தொகைக் குறைவினால் சாதகமான விளைவுகள் எதனையும் அவர்களால் எட்டமுடியவில்லை.

உலகத்தில் எங்காவது இலங்கைக் கெதிராக ஆர்ப்பாட்டம் நடைபெறும் போது அவுஸ்ரேலியாவில் உள்ள சிங்களவர்களைத் திரட்டி ஆர்ப்பாட்டம் ஒன்றைச் செய்து இலங்கை அரசு தனது கருத்தை உலகுக்குச் சொல்வதற்கு அவுஸ்ரேலியாவை ஒரு இடமாகப் பயன்படுத்த முனைவதாகவே தோன்றுகின்றது.

ஏனெனில் அவுஸ்ரேலியா ஒரு அமெரிக்க சார்பு நாடு. இப்போது இலங்கை சீனாவுடன் சேர்ந்து கொண்டு கிட்டத்தட்ட அமெரிக்காவின் எதிர்ப்பு நாடாகவே உள்ளது. உலகில் கூடுதலான சிங்களவர்கள் வாழ்ந்து வரும் இடமாக அவுஸ்ரேலியாவே உள்ளது. இவர்கள் அனைவரும் உயர் உத்தியோகங்களில் இருப்பதனால் அவர்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்ளத் தயாராகவில்லை.

அதனால் அவர்களுக்குச் சார்பாக வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்யக் கூடிய தமிழர் எனும் போர்வையில் தமிழ் பேசத்தெரிந்த சிங்களவர்களும் அரச சார்பு முஸ்லிம்களும் களமிறக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஒரு ஆர்ப்பாட்டத்தினைச் செய்தால் படித்த சிங்களவர்கள் பல ஊடகங்களினூடாக தமது அரச சார்புக் கருத்துக்களை உலகுக்குத் தெரியப்படுத்தும் முயற்சியாகவே இது அமைந்துள்ளது. இதுவே ராசபச்சே குடும்பத்தினரின் பிரதான திட்டமாக இருக்கின்றது.

இதனை விட 2009 ஆம் ஆண்டு இறுதிப்போரின் கடைசி வரை கடற்படையை வழிநடாத்தி தமிழர்களை பெருமளவில் கொன்று குவித்த ஒரு கடற்படை அதிகாரி ஒருவரே அவுஸ்ரேலியாவின் இலங்கைக்கான தூதுவராக இருப்பதும் அனைத்துக்கும் சார்பாகவே உள்ளது குறிப்பிடத் தக்கது.

தற்போது வந்திருப்பவர்கள் தமிழ் தெரிந்த சிங்களவர்கள் என்பதால் இங்குள்ள தமிழர்களுக்கு ஆதரவான செயற்பாட்டாளர்களை இனம் கண்டு தகவல்களை திரட்டி இலங்கைக்கு அனுப்புவதனூடாக அவுஸ்ரேலியக் குடியுரிமை பெற்ற இலங்கைத் தமிழர்களை இலங்கைக்கு செல்லும் சந்தர்ப்பங்களில் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்படக் கூடிய சந்தர்ப்பங்களுக்கும் வாய்ப்பை உண்டாக்குகின்றது.

இதிலிருந்து அவுஸ்ரேலியா வாழ் தமிழர்கள் கவனமாக இருப்பதோடு அவுஸ்ரேலிய அரசும் உண்மையான தமிழ் அகதிகளை இனம் கண்டு அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பதே ஒவ்வொரு தமிழனின் எதிர்பார்ப்பாகும்.

- துரோணர்(சிட்னி)-

eelampress1@gmail.com
Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome
Suresh-remax-2013-01-01
Canada Kanthasamy Kovil
INNSYS-20120930
Mahesan supramaniyam 031109
AJRwindows22.05.13
TamilsGuid-191012-2013
NIRO-DANCE-100213
Ramans2011
RoyaShades-l2011(04-12-11)
TDE_Computers2011
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com