Untitled Document
முகப்பு | செய்திகள் | தளங்கள் | கட்டுரைகள் | நிகழ்வுகள் | தொடர்பு | சினிமா | படத்தொகுப்பு
May 22, 2013 [GMT]

  • Welcome
  • Welcome
நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை அமுல்படுத்த போகிறார்களாம்: அனலை நிதிஸ் ச. குமாரன்
[Saturday, 2012-07-28 23:12:34]

சிறிலங்கா விடயத்தில் ஐக்கிய நாடுகள் சபை எவ்வித நடவடிக்கைகளையும் எடுத்துவிடாமல் தடுக்க நியமிக்கப்பட்டதே கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நில்லிணக்க ஆணைக்குழு. ஐ.நாவின் மனித உரிமை அமர்வில் சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் சில மேற்கத்தைய நாடுகளினால் கொண்டுவரப்பட்ட பிரேரணை வெற்றிபெற்றது சிறிலங்காவுக்கும் அதனுடைய நேச நாடுகளுக்கும் பேரதிர்ச்சியாக அமைந்தது. பல கோடி ரூபாக்களை செலவுசெய்து இராஜதந்திர முன்னெடுப்புக்களை எடுத்தும் தோல்வியில் முடிந்தது சிறிலங்காவுக்கு பேரதிர்ச்சியாக அமைந்தது.


  

அமெரிக்கா உட்பட பல மேற்கத்தைய நாடுகள் சிறிலங்காவுக்கு எதிராக கடுமையான போக்கை கடந்த மார்ச் மாதம் வரை எடுக்கவில்லை.இன்றும் நேசத்துடனேயே சிறிலங்காவுடன் இராஜதந்திர உறவை வைத்துள்ளது அமெரிக்கா. அமெரிக்காவின் ஒரேயொரு கோரிக்கை என்னவெனில் 'கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நில்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை அமுல்படுத்தினால் தமிழர்களின் தேசியப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம்' என்பதே. அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்றக்கொள்ள முடியாதென்று சூளுரைத்து வந்த சிறிலங்கா அரசு, மென்மேலும் பல சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டிவரும் என்கிற காரணத்தினால் அமெரிக்காவின் கோரிக்கையை நிறைவேற்ற சம்மதித்துள்ளது.

சிறிலங்காவின் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிகப்பட்ட குறித்த ஆணைக்குழுவின் அறிக்கையை அமுல்படுத்த சிறிலங்காவின் பாராளுமன்றம் ஏகமனதாக ஒப்புதல் அளித்துள்ளது. சிறிலங்கா அரசின் பேச்சாளரும் தகவல் அமைச்சருமான கெகலிய ரம்புக்கல செய்தியாளர்களிடம் பேசுகையில் குறித்த அறிக்கையின் சிபாரிசுகளை அமுல்படுத்த பெரும்பான்மையான பாராளுமன்ற அங்கத்தவர்கள் சம்மதித்துவிட்டதாகவும் ஆறு மாதத்தில் தொடங்கி படிப்படியாக குறித்த சிபாரிசுகளை மூன்று வருட காலப்பகுதிக்குள் நிறைவேற்றி முடிக்கப்படும் என்று கூறினார்.

சிபாரிசுகளை அமுல்படுத்துவதென்பது வெறும் கண்துடைப்பு நாடகமே

குறித்த ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் அனைவரும் சிங்கள அரசுக்கு வேண்டப்பட்டவர்கள். இக்குழுவின் தலைவர் முன்னர் தமிழ்க் கைதிகளை பார்த்து 'கொட்டியாக்கள்' என்று கூறி பல்லாண்டு காலங்கள் சிறைவைத்த பெரு மகான். இப்படிப்பட்ட தமிழின விரோதிகளின் தலைமையில் உருவான அமைப்பின் சிபாரிசுகள் எவ்விதத்திலும் தமிழர்களுக்கு விமோசனத்தை அளிக்கப்போவதில்லை.

பான் கீ மூன் ஏதோ சர்வதேச விசாரணையை நடத்தி சிறிலங்கா அரசுக்கு 'அரச பயங்கரவாத' முத்திரை குத்திவிடுவாரோ என்கிற அச்சத்திலேயேதான் இக்குழுவை மகிந்தா அமைத்தார் என்பது எவ்வித ஐயத்துக்கும் இடமின்றி கூறப்பட்டது. ஆணைக்குழுவின்388 பக்கங்களைக் கொண்ட அறிக்கை நவம்பர் 20, 2011 மகிந்த ராஜபக்சாவிடம் கையளிக்கப்பட்டது.விடுதலைப்புலிகளுக்கும் சிறிலங்கா அரசிற்கும் இடையில் இடம்பெற்ற சமாதானப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பித்த காலப்பகுதி முதல் மே 2009-இல் போர் முடிவுக்கு வரும் வரையிலான காலப் பகுதியில் இடம்பெற்ற சம்பவங்களை ஆராயும் வகையில் இந்த ஆணைக்குழு ஜனாதிபதியினால் 2010-இல் நியமிக்கப்பட்டது.

குறித்த சிபாரிசுகளை அமுல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்து ஆராய ஒரு குழுவை நியமித்தார் மகிந்த ராஜபக்ச. இக்குழுவில் மகிந்தாவின் செயலாளர் லலித் வீரதுங்கா, வெளிவிவகார அமைச்சர் பீரிஸ், முன்னாள் சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ், சிரேஷ்ட அமைச்சர்கள் செயலகத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி மஹிந்த மணிகேவ, நீதி அமைச்சின் செயலாளர் கமலினி டி சில்வா, விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் தரா டி சில்வா மற்றும் ஜனாதிபதி செயலகத்தின் மூன்று சிரேஷ்ட அதிகாரிகள் இக்குழுவில் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.

குறிப்பிடப்பட்டுள்ள285 முன்மொழிவுகளும் ஆறு மாத காலத்திலிருந்து மூன்று வருட காலத்துக்குள் அமுல்படுத்தப்படும் என தெரிவித்தார் அரசாங்கத்தின் பேச்சாளர். இந்த முன் மொழிவுகள் நான்கு தொகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளதுடன் இதற்காக தேசிய வேலைத்திட்டமொன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கபட்டுள்ளது.குறித்த சிபாரிசுகளை 6, 12, 24 மற்றும் 36 மாத காலப் பகுதிக்குள் கட்டம் கட்டமாக அமுல்படுத்தப்படும் எனக் குறிப்பிட்டார் அரச பேச்சாளர்.

தமக்கு அச்சுறுத்தல் வருகிறது என்று அறிந்துவிட்டால் ஒப்பந்தங்களையும், இதுபோன்ற ஆணைக்குழுக்களின் சிபாரிசுகளையும் அமுலாக்குவோம் என்று கூறிவிட்டு காலம் கடந்த பின்னர் கிளித்தெறிவதுவுமே சிங்கள அரசுகளின் கைவந்த கலையாக இருக்கிறது. தமிழர்களுக்கு இது ஒன்றும் புதிதல்ல. அமெரிக்கா போன்ற மேற்கத்தைய நாடுகளை நிச்சயம் அடுத்த மூன்று வருடங்களுக்கு மேலாக ஏமாற்றலாம் என்று சிங்கள் அரசு திடமாக நம்புகிறது.

பொய்யையும் பொருந்தச் சொல்ல வேண்டும்:

சிங்கள அரசுகள் கூறும் அனைத்துமே பொய்யென்று ஒரு குழந்தை கூட கூறிவிடும். அப்படியான பொய்களை தொடர்ந்தும் சொல்லியே வருகிறது சிங்கள அரசுகள். சிபாரிசுகளை அமுல்படுத்தப்போவதாக அறிவுக்கும் பத்திரிகையாளர் சந்திப்பில் மகிந்தாவின் செயலாளர் லலித் வீரதுங்க கூறுகையில், "ஆணைக்குழுவின் பரிந்துரைகளை தனியொரு அமைச்சினால் மாத்திரம் முன்னெடுக்க முடியாது. பல அமைச்சுக்கள் இணைந்தே முன்னெடுக்க முடியும். இதனாலேயே வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸின் முன்மொழிவிற்கமைய ஜனாதிபதி விசேட செயலணி அமைக்கப்பட்டது. ஆணைக்குழுவின் முன்மொழிவுகளை அமுல்படுத்தும் செயற்பாட்டில் பாதுகாப்பு அமைச்சு, நீதி அமைச்சு, வெளிவிவகார அமைச்சு, பத்திரிகை ஆணைக்குழு, சட்டமா அதிபர் திணைக்களம், காணி அமைச்சு, சுகாதார அமைச்சு, பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு, தேசிய கல்வி நிறுவகம் மற்றும் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் உட்பட அனைத்து அரச நிறுவனங்களும் இணைந்து செயற்படவுள்ளன."

"இதன் மூலம் அனைத்து அரச நிறுவனங்களும் இந்த செயலணியுடன் இணைந்து செயற்படும். இந்த முன்மொழிவுகளை முன்னெடுப்பதற்கு தேவையான நிதி 2013-ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில ஒதுக்கப்படவுள்ளது. நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை கடந்த நவம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்நிலையில் 2012-ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் ஏற்கனவே நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டடு விட்டதால் முன்மொழிவுகளை அமுல்படுத்துவதற்காக நிதி ஒதுக்க முடியாமல் போனது. எனினும் 2013-ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் நிதியின் ஊடாக ஆணைக்குழுவின் முன்மொழிவுகளை முன்னெடுப்பதற்காக நிதி ஒதுக்கப்படுவதன் மூலம் நாட்டில் பாரிய மாற்றம் ஏற்படும்."

"இந்த அனைத்து முன்மொழிவுகளும் தேசிய கொள்கை, இறுதிக் கட்ட யுத்தம்,மனித உரிமையும் தேசிய பாதுகாப்பும் மற்றும் மீள்குடியேற்றமும் தேசிய அபிவிருத்தியும் என நான்கு பாரிய பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ளன. உதாரணமாக யுத்தத்தின் போது படையினர் ஏதாவது பிழை செய்திருந்தால் தண்டிக்க வேண்டும் என ஆணைக்குழு அறிக்கை முன்மொழிவின்9.9-ஆவது சரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிணங்க, குறித்த குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு பாதுகாப்பு சட்டத்திற்கிணங்க விசாரிக்கப்படுவர். இதற்காக சுமார் 12 மாதங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.பின்னர், இதன் தொடர்ச்சியாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக 24 மாதங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.இதனை தொடர்ந்து குற்றமிழைத்தவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு தண்டனை வழங்கப்படும். இதற்கு 24 மாதங்கள் தேவைப்படும்."

"இந்த செயற்பாட்டில் பாதுகாப்பு அமைச்சு, நீதி அமைச்சு மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் ஆகியன இணைந்து செயற்படவுள்ளன. இந்த செயற்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட கால பகுதிக்கு முன்னர் இது நிறைவடைய முடியும். அதேபோன்று, காணி செயற்பாட்டினை மேற்கொள்வதற்காக நான்காவது காணி ஆணைக்குழு நியமிக்கப்படவுள்ளது. ஏற்கனவே 1927, 1936 மற்றும் 1985 ஆகிய ஆண்டுகளில் காணி ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. தற்போது நடைமுiயிலுள்ள காணி சட்டத்திற்கிணங்க,ஒருவர் காணியினை உரிமையாக்குவதற்கு சுமார் 40 செயற்பாடுகளில் ஈடுபட வேண்டும். எனினும் புதிதாக அமைக்கப்படவுள்ள காணி ஆணைக்குழுவின் மூலம் மிக விரைவில் காணியின் உரிமையை பெற்றுக்கொள்ள முடியும்."

"நல்லிணக்க ஆணைக்குழுவினால் முன்மொழியப்பட்டுள்ள சிபாரிசுகளை அரச நிறுவனங்கள் அமுல்படுத்துவது தொடர்பில் இந்த செயலணி கண்காணிப்பினையும் இணைப்பினையும் மேற்கொள்ளும். ஜனாதிபதி செயலணியினால் மேற்கொள்ளப்படும் அனைத்து செயற்பாடுகளும் மக்கள் மயப்படுத்தப்படும். அத்துடன் ஆணைக்குழுவின் முன்மொழிவுகளை அமுல்படுத்துவது தொடர்பில் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள்,அரசார்பற்ற நிறுவனங்களினால்; ஜனாதிபதி செயலணிக்கு கருத்துகளை தெரிவிக்க முடியும் என்றார் லலித் வீரதுங்க.

அரசினால் கூறப்பட்டுள்ள அனைத்துமே நடைமுறைச் சாத்தியமில்லை. ஏற்கனவே மிதிவெடிகளை அகற்றும் பணி பெரும்பாலும் பூர்த்தியடைந்து விட்டதாக கூறும் அரசு, அப்படியெனில் எதற்காக மக்களை தமது சொந்த ஊர்களில் குடியமர்த்த சிங்கள அரசு அனுமதி மறுக்கிறது. காணிகளின் உரிமையாளர்களுக்கு நஷ்ட ஈடு கொடுப்பதாக கூறும் சிங்கள அரசு எதற்காக தொடர்ந்தும் தமிழர்களின் காணிகளை அபகரிக்கும் வேலைகளை செய்கிறது.

இறுதிப் போர் இடம்பெற்ற காலப்பகுதியில் மனித உரிமை மீறல்களை மேற்கொண்ட சிங்கள உயர் அதிகாரிகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி தப்பிக்கவிட்ட பின்னர் யாருக்கெதிராக சிங்கள அரசு விசாரணைகளை மேற்கொள்ளப் போகிறது. சாட்சிகளையே இல்லாமல் செய்யும் வேலையில் இறங்கியுள்ள சிங்கள அரசு எப்படி நீதியைப் பெற்றுத்தரம். இது போன்ற பல நூறு கேள்விகள் எழுந்தாலும் ஒன்றுக்கும் தெளிவான விடையளிக்க தயாராக இருக்கவில்லை சிங்கள அரசு. வேலியே பயிரைத் தின்னும் போது யாரைத் தண்டிப்பது? இதற்கான பதில் கிடைக்கும் முன்னரே பல அட்டூழியங்கள் நடந்தேறிவிடும்.

இவ் ஆய்வு பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

தொடர்புகொள்ள வேண்டிய மின்னஞ்சல்: nithiskumaaran@yahoo.com

Back to News   Bookmark and Share Seithy.com

  • Welcome
  • Welcome
Mahesan supramaniyam 031109
RoyaShades-l2011(04-12-11)
TDE_Computers2011
Suresh-remax-2013-01-01
Ramans2011
INNSYS-20120930
TamilsGuid-191012-2013
Canada Kanthasamy Kovil
NIRO-DANCE-100213
      www.seithy.com      Copyright © 2010 - Contact Us at : infoseithy@gmail.com