"கம்பனோடு நிறுத்திக் கொள்ளுங்கள்! தமிழர்களின் வரலாற்றை மறக்கச் சொல்லாதீர்கள்! வெளிநாட்டு உதவிகளை நிறுத்தச் சொல்லாதீர்கள்" - நக்கீரன் | Seithy.com - 24 Hours Tamil News Service, World's largest daily tamil news,tamil breaking news,tamilclassifieds,tamil entertainment, srilanka, tamilnadu, tamileelam | www.seithy.com
 Untitled Document
November 16, 2026 [GMT]

"கம்பனோடு நிறுத்திக் கொள்ளுங்கள்! தமிழர்களின் வரலாற்றை மறக்கச் சொல்லாதீர்கள்! வெளிநாட்டு உதவிகளை நிறுத்தச் சொல்லாதீர்கள்" - நக்கீரன்
[Saturday 2026-11-14 13:00]

கம்பவாரிதி ஜெயராஜ் அவர்களே! இந்த விவாதத்தைத் தொடக்கி வைத்தவர்கள் நீங்கள்தான். நீங்கள் உதிர்த்த இரண்டு முத்துக்கள் இவை. ஒன்று: போராட்டத்தை மறந்துவிடுங்கள்! இரண்டு: வெளிநாட்டு உதவிகளை நிறுத்திவிடுங்கள்! சொல்வதற்கு எளிதாக இருக்கலாம். ஆனால் இந்த இரண்டு கருத்துகளின் பின்னால் இருக்கும் அரசியல், சமூக விளைவுகளை நீங்கள் சிந்தித்துப் பார்த்தீர்களா? போராட்டத்தை மறந்துவிடுங்கள் என்றால் எதை மறக்கச் சொல்கிறீர்கள்? இலங்கை சுதந்திரம் பெற்ற காலந்தொட்டு சிங்கள–பௌத்த மேலாதிக்கத்துக்கு எதிராகத் தமிழர்கள் நடத்திய அகிம்சைப் போராட்டங்களையா? தங்கள் அரசியல் உரிமைகளுக்காக முன்னெடுத்த ஆயுதப் போராட்டத்தையா? அல்லது அந்தப் போராட்டங்களில் தமிழர்கள் சந்தித்த இழப்புகளையும் துயரங்களையுமா? 1956, 1958, 1977, 1983 ஆகிய ஆண்டுகளில் தமிழர்கள் எதிர்கொண்ட இனவன்முறைகளையும் முள்ளிவாய்க்கால் பேரவலத்தையும் மறந்துவிட்டு என்ன செய்ய வேண்டும்? சிங்கள மேலாதிக்கத்துக்கு அடிபணிந்து தமிழர்கள் காலாகாலத்துக்கும் இரண்டாந்தரக் குடிமக்களாக வாழ வேண்டும் என்பதுதான் உங்கள் எதிர்பார்ப்பா? வரலாற்றை மறப்பது நல்லிணக்கம் அல்ல.


  

அநீதியை மறைப்பதற்கான வழியாக அது மாறிவிடும். யூதர்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகத் தங்கள் வரலாற்றையும் பண்பாட்டு அடையாளத்தையும் பாதுகாத்து வந்தார்கள். அந்த வரலாற்று நினைவும் தேசிய வேட்கைகளும் இஸ்ரேல் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்தன. இன்று இஸ்ரேல் மத்திய கிழக்கில் இராணுவ, பொருளாதார வலிமை கொண்ட நாடாக விளங்குகிறது. யூதர்கள் தங்கள் வரலாற்றை நினைவுகூரலாம். தமிழர்கள் மட்டும் தங்கள் வரலாற்றை மறந்துவிட வேண்டுமா? இது என்ன நியாயம்? அடுத்து, புலம்பெயர் தமிழர்களின் உதவிகள் பற்றிய உங்கள் கருத்துக்கு வருவோம். வெளிநாட்டு உதவிகள் எமது மக்களைச் சோம்பேறிகளாக்கிவிட்டதாகக் கூறுகிறீர்கள்.

அவற்றை நிறுத்திவிட வேண்டும் என அறிவுரை வழங்குகிறீர்கள். அதே நேரத்தில், தாயக மக்களுக்கு நீங்கள் என்ன செய்தீர்கள் என்று புலம்பெயர் தமிழர்களிடம் கேள்விகளையும் அடுக்குகிறீர்கள். உதவி செய்ய வேண்டாம் என்கிறீர்கள். பின்னர் என்ன உதவி செய்தீர்கள் என்று கேட்கிறீர்கள். இது என்ன முரண்பாடு? என்னை எடுத்துக்கொள்ளுங்கள். இயக்கச்சியில் வாழும் முன்னாள் போராளி ஒருவருக்குத் தோட்டம் அமைத்துத் தொழில் செய்வதற்காக ஏறத்தாழ ஐந்து இலட்சம் ரூபாய் வழங்கியுள்ளேன். இன்று அவர் தனது சொந்தக் காலில் நிற்கிறார். அவரது வேண்டுகோளுக்கு இணங்க மேலும் சிலருக்குக் கோழி வளர்ப்புத் தொழில் தொடங்க இலட்சக்கணக்கில் உதவியுள்ளேன். அவர்களில் சிலர் உதவியைப் பெற்ற பின்னர் தொடர்புகளைத் துண்டித்துக்கொண்டார்கள். அமைப்பு ரீதியாகவும் ஆடு, மாடு வளர்ப்புத் திட்டங்களுக்கு உதவியுள்ளோம். ஆனால் அவை அனைத்தும் முற்றிலும் வெற்றிபெறவில்லை.

கறவை மாடு வாங்கிக் கொடுத்தால் அது பால் கொடுக்கும் காலம்வரை பராமரிக்கிறார்கள். பால் கொடுப்பது நின்றுவிட்டால் மாட்டை விற்றுவிடுகிறார்கள். இதற்காக அவர்களைக் குற்றம் சொல்ல முடியாது. அன்றாட வாழ்க்கையை நடத்தவே போராடும் மக்களின் பொருளாதாரச் சிக்கல்களை நாம் புரிந்துகொள்ள வேண்டும். வறுமையில் வாழும் மக்களுக்கு அறிவுரை வழங்குவது எளிது. அவர்களை வறுமையிலிருந்து மீட்பதுதான் கடினம். எனது பெற்றோரின் நினைவாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 68 இலட்சம் ரூபாய் பெறுமதியான புலமைப்பரிசில் நிதியத்தை நிறுவியுள்ளேன். அதன் மூலம் முன்னாள் போராளிகள் மற்றும் மாவீரர் குடும்பங்களைச் சேர்ந்த பத்து மாணவர்களுக்கு மாதந்தோறும் தலா 3,000 ரூபாய் வழங்கப்படுகிறது. திருகோணமலை, யாழ்ப்பாண மாவட்டங்களில் எனது சொந்த நிதியில் கிணறுகள் வெட்டிக் கொடுத்துள்ளேன்.

திருகோணமலையில் மட்டும் 16 இலட்சம் ரூபாய் செலவில் ஒரு வெட்டுக்கிணற்றை அமைத்துக் கொடுத்துள்ளேன். இவற்றை எனது பெருமைக்காகச் சொல்லவில்லை. புலம்பெயர் தமிழர்கள் தாயக மக்களுக்கு என்ன செய்தார்கள் என்று நீங்கள் கேட்பதால்தான் சொல்ல வேண்டியிருக்கிறது. புலம்பெயர்ந்த தமிழர்களில் பலர் தங்களால் இயன்ற உதவிகளைத் தனிப்பட்ட முறையிலும் அமைப்புகள் மூலமாகவும் தொடர்ந்து செய்து வருகிறார்கள். கனடா தமிழர் பேரவை மட்டக்களப்பில் சுமார் மூன்று கோடி ரூபாய் முதலீட்டில் பெரிய இலைமுருங்கைப் பண்ணையை நடத்தி வருகிறது.

கனடா, இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் வாழும் சில தமிழ் முதலீட்டாளர்கள் வன்னியில் ஆடு, மாடு, கோழி, பன்றி வளர்ப்பு; மா, மாதுளை மற்றும் மரக்கறிச் செய்கை ஆகியவற்றை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த பண்ணைகளை உருவாக்கி, பலருக்கு வேலைவாய்ப்புகளை வழங்கி வருகிறார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கனடாவிலிருந்து தாயகம் சென்ற முதலீட்டாளர் ஒருவர் கிளிநொச்சியில் நூறு ஏக்கர் காணியில் ஆயிரம் மாதுளைக் கன்றுகளை நட்டு வளர்த்து வருகிறார். அவை அறுவடைக்குத் தயாராகி வருகின்றன. இவை போதுமானவையா?
நிச்சயமாக இல்லை! பல தசாப்தகாலப் போரினால் அழிந்துபோன ஒரு பிரதேசத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்குப் பல்லாயிரம் கோடி ரூபாய் முதலீடும் நீண்டகாலத் திட்டமிடலும் தேவை. வீடுகள், விவசாயம், தொழிற்சாலைகள், வேலைவாய்ப்புகள், கல்வி, மருத்துவம் எனப் பல துறைகள் மீட்டெடுக்கப்பட வேண்டும். இந்தப் பொறுப்பின் பெரும்பகுதி இலங்கை அரசுக்குரியது. ஆனால் தேவையான அளவில் உதவிகளை வழங்க உலக நாடுகளும் முன்வரவில்லை.

இத்தகைய சூழலில் புலம்பெயர் தமிழர்களின் உதவிகளையும் நிறுத்திவிடச் சொல்வது எந்த வகையில் நியாயம்? வெளிநாட்டு உதவிகளில் குறைபாடுகள் இருக்கலாம். சில திட்டங்கள் தோல்வியடைந்திருக்கலாம். அவற்றைச் சீர்செய்ய வேண்டுமே தவிர, உதவிகளையே நிறுத்திவிட வேண்டும் என்பது அறிவார்ந்த தீர்வல்ல. மீன் கொடுப்பதைவிட மீன்பிடிக்கக் கற்றுக்கொடுப்பது சிறந்தது என்பார்கள்.

ஆனால் பசியால் வாடுபவனுக்கு மீன்பிடிக்கக் கற்றுக்கொடுக்கும் வரை உணவும் தேவை என்பதை மறந்துவிடக் கூடாது. கம்பவாரிதி அவர்களே! கம்பனின் பாடல்களை மேடையில் பாடிப் பொருள் சொல்லிப் பிழைப்பு நடத்துவதற்கும், வெயிலில் வியர்வை சிந்தி வயலில் உழைப்பதற்கும் மிகப்பெரிய வேறுபாடு இருக்கிறது. நீங்கள் கம்பனை வைத்துப் பிழைப்பு நடத்துகிறீர்கள். அதில் தவறில்லை.

ஆனால் வயலில் இறங்கி உழைக்கும் மக்களின் வாழ்க்கையை அனுபவித்தறியாமல், அவர்களைச் சோம்பேறிகள் என்று முத்திரை குத்துவதற்கு என்ன நியாயம் இருக்கிறது? குளிரூட்டப்பட்ட அரங்குகளில் அமர்ந்து கம்பராமாயணத்துக்கு விளக்கவுரை வழங்குவது வேறு. கொளுத்தும் வெயிலில் நிலத்தைப் பண்படுத்தி, விதை விதைத்து, மழைக்காக வானத்தைப் பார்த்துக் காத்திருப்பது வேறு. கம்பனின் கவிதைகளில் உழைப்பின் பெருமையைப் பேசலாம்.

ஆனால் வயலில் இறங்கினால்தான் உழைப்பின் வலியும் வியர்வையின் விலையும் தெரியும். சரி, இப்போது உங்களிடமே சில கேள்விகள். புலம்பெயர் தமிழர்களைப் பார்த்து இத்தனை கேள்விகளைச் சரமாரியாகக் கேட்கும் நீங்கள், தாயக மக்களின் துயரங்களைப் போக்க என்ன செய்திருக்கிறீர்கள்? உங்கள் கம்பன் கழகம் என்ன செய்திருக்கிறது? சனாதிபதிகளை அழைக்கிறீர்கள். அமைச்சர்களை அழைக்கிறீர்கள். அரசியல் பிரமுகர்களை அழைத்து விழாக்களை நடத்துகிறீர்கள். அந்தத் தொடர்புகளையும் செல்வாக்கையும் பயன்படுத்திப் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்ன உதவிகளைப் பெற்றுக்கொடுத்திருக்கிறீர்கள்? அந்த விழாக்களுக்குக் கிடைக்கும் நிதியுதவிகளில் ஏதேனும் ஒரு பகுதி ஏழை மாணவர்களின் கல்விக்கோ, கைம்பெண்களின் வாழ்வாதாரத்துக்கோ, முன்னாள் போராளிகளின் மறுவாழ்வுக்கோ செலவிடப்பட்டிருக்கிறதா? அப்படிச் செய்திருந்தால் அதன் விவரங்களைப் பகிரங்கமாக வெளியிடுங்கள்.பாராட்டுவதற்கு நாங்கள் தயங்கமாட்டோம்.

அடுத்து உங்கள் ஆன்மீகப் பார்வைக்கு வருவோம். நீங்கள் கம்பராமாயணத்தின் மீது அளவற்ற பற்றுக்கொண்டவர். கம்பனின் கவித்திறனையும் சொல்லழகையும் பொருளழகையும் மேடைகள்தோறும் எடுத்துரைக்கிறீர்கள். கம்பன் ஒரு சிறந்த கவிஞன் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் சிறந்த கவிதையில் இடம்பெறுவதால் மட்டும் ஒரு கதாபாத்திரத்தின் செயல்கள் அனைத்தும் அறமாகிவிடுமா?
இங்கே தந்தை பெரியாரையும் அறிஞர் அண்ணாவையும் நினைவுகூர வேண்டியிருக்கிறது. பெரியார் இராமாயணத்தை வெறும் சமய இலக்கியமாகப் பார்க்கவில்லை. அதில் இடம்பெறும் வருணாசிரமக் கருத்துகளையும் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளையும் பகுத்தறிவுக் கண்ணோட்டத்தில் கடுமையாக விமர்சித்தார். மலத்தைத் தங்கத் தட்டில் வைத்துக் கொடுத்தால் அதை ஏற்றுக்கொள்வீர்களா எனக் காட்டமாகக் கேட்டார்? பெரியாரின் விமர்சனப் பார்வையை விளக்கும் இந்த உவமையின் பொருள் தெளிவானது. தங்கத் தட்டு அழகாக இருக்கலாம்.

விலை உயர்ந்ததாக இருக்கலாம். ஆனால் அதில் வைக்கப்பட்டிருக்கும் பொருளின் தன்மை அதனால் மாறிவிடாது. அதுபோலவே கம்பனின் கவிதை அழகாக இருக்கலாம். அதன் சொற்சுவையும் பொருள்சுவையும் உயர்ந்ததாக இருக்கலாம். ஆனால் அந்த இலக்கிய அழகு, அதில் இடம்பெறும் அறநெறி முரண்பாடுகளையும் சமூக அநீதிகளையும் நியாயப்படுத்திவிட முடியாது.

பெரியாரும் அறிஞர் அண்ணாவும் இராமாயணத்தின் சமூக, அரசியல் கருத்துகளை எதிர்த்து இயக்கம் நடத்தினார்கள். இராமாயண எரிப்புப் போராட்டங்களும் அந்த எதிர்ப்பின் ஒரு பகுதியாக அமைந்தன. அண்ணா தனது தீ பரவட்டும் போன்ற எழுத்துகளின் வழியாக இராமாயணத்தின் கருத்தியல் ஆதிக்கத்தைச் சவாலுக்கு உட்படுத்தினார். அவர்கள் எழுப்பிய அடிப்படைக் கேள்வி இதுதான்: ஒரு இலக்கியத்தின் கவித்துவச் சிறப்புக்காக அதில் இடம்பெறும் சமூக அநீதிகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டுமா?
இப்போது நீங்கள் உச்சிமீது வைத்துப் போற்றும் இராமனின் செயல்களைச் சற்று ஆராய்வோம். இராமாயண மரபில் இடம்பெறும் சம்பூகன் வதக் கதையில் வெளிப்படும் வருணப் பாகுபாட்டை எவ்வாறு நியாயப்படுத்துவது? வாலியை மறைந்திருந்து அம்பெய்திக் கொன்ற இராமனின் செயல் எந்த வகையில் அறம்?இவற்றைவிடச் சீதைக்கு இழைக்கப்பட்ட அநீதிதான் மிகப்பெரியது. தனது கணவனுடன் காட்டுக்குச் சென்று துன்பங்களை அனுபவித்தவள் சீதை.

இராவணனால் சிறைபிடிக்கப்பட்ட பின்னரும் தனது உறுதிப்பாட்டைக் கைவிடாதவள். அவளை மீட்ட இராமன், அவளது தூய்மையை எண்பிக்கத் தீப்பரிசோதனைக்கு உட்படுத்துகிறான். அத்துடன் சீதையின் துயரம் முடிந்துவிடவில்லை. அயோத்திக்குத் திரும்பிய பின்னர், ஊரார் பேசிய பழிச்சொற்களுக்காகத் தனது கருவுற்ற மனைவியையே காட்டுக்கு அனுப்புகிறான் இராமன். ஊரார் பேச்சைக் கேட்டு மனைவியைக் கைவிடுபவன் எப்படி அவதார புருசனாக ஆக முடியும்?

மனைவிக்கு நீதி வழங்கத் தவறியவன் எப்படிச் சிறந்த அரசனாக முடியும்? காட்டில் வால்மீகி முனிவரின் ஆதரவில் சீதை வாழ்கிறாள். அங்கேயே இலவனையும் குசனையும் பெற்றெடுத்து வளர்க்கிறாள். பின்னர் இராமனின் அவையில் மீண்டும் அவளது தூய்மை கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. ஏற்கெனவே தீப்பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட ஒரு பெண் மீண்டும் தனது கற்பை தீக்குளித்து எண்பிக்க வேண்டுமா?

வால்மீகி இராமாயணத்தின் உத்தரகாண்டத்தில், மீண்டும் தனது தூய்மையை உறுதிப்படுத்த வேண்டிய சூழலில் சீதை பூமித்தாயை அழைக்கிறாள். பூமி பிளந்து அவளைத் தன்னுள் ஏற்றுக்கொள்கிறது. ஒரு பெண்ணின் கண்ணியத்தைப் பாதுகாக்க முடியாத சமூகத்தின் அறநெறி எத்தகைய அறநெறி? அந்த அநீதியைத் தடுக்க முடியாத இராமனின் அறம் எத்தகைய அறம்? இராமனின் இறுதி நிகழ்வும் கேள்விகளை எழுப்புகிறது.

உத்தரகாண்டத்தில் பைத்தியம் பிடித்த இராமன் சரயு நதியில் இறங்கி தனது மண்ணுலக வாழ்வை முடித்துக்கொள்வதாகக் கூறப்படுகிறது. சமய மரபு இதனைத் தெய்வீகப் பிரவேசமாக விளக்குகிறது. ஆனால் இந்நிகழ்வை இலக்கிய, பகுத்தறிவுக் கண்ணோட்டத்தில் விமர்சிப்பதற்கு ஏன் இடமிருக்கக் கூடாது? ஒரு கதாபாத்திரத்தின் ஒவ்வொரு செயலுக்கும் தெய்வீக விளக்கம் கொடுத்துவிட்டால், அதன் அறநெறிப் பொறுப்பைப் பற்றி எப்போது கேள்வி எழுப்புவது?

கம்பவாரிதி அவர்களே! இராமனின் செயல்களை விமர்சிப்பது கம்பனின் கவித்திறனை மறுப்பதாகாது. கம்பனை இலக்கிய மேதையாகப் போற்றுவதற்கும், இராமனை அறத்தின் முழுமையான வடிவமாக ஏற்றுக்கொள்வதற்கும் மிகப்பெரிய வேறுபாடு இருக்கிறது. கம்பனின் சொற்சுவையில் மயங்கிய நீங்கள், அந்தக் கதையில் சீதைக்கு இழைக்கப்பட்ட அநீதியையும் பார்க்க வேண்டாமா?
கம்பனின் பாடல்களை மேடைகளில் விளக்கிப் பிழைப்பு நடத்துவதில் தவறில்லை. ஆனால் இலக்கிய மேடையில் கிடைக்கும் புகழ், தமிழ் மக்களின் அரசியல் வரலாற்றைப் பற்றித் தீர்ப்பளிக்கும் அதிகாரத்தை வழங்கிவிடாது. கம்பனின் கவிதைகளுக்கு விளக்கம் சொல்லும் உங்கள் ஆற்றலை மதிக்கிறோம். ஆனால் மக்களின் பசியையும் வறுமையையும் போராட்ட வரலாற்றையும் கம்பராமாயணத்தின் பாடல்களால் அளவிட முயலாதீர்கள். தமிழர்களின் போராட்ட வரலாறு என்பது வெறும் துப்பாக்கிகளின் வரலாறு அல்ல.

அது மொழியுரிமை, சமத்துவம், அரசியல் அதிகாரப் பகிர்வு, ஓர் இனத்தின் தேசிய அடையாளம், கண்ணியம் ஆகியவற்றுக்கான போராட்ட வரலாறு. அந்தப் போராட்டத்தின் வெற்றிகள், தோல்விகள், தவறுகள் அனைத்தையும் விமர்சனபூர்வமாக ஆராயலாம். ஆனால் வரலாற்றையே மறந்துவிடுங்கள் என்று கூறுவது தீர்வல்ல.

கம்பவாரிதி அவர்களே! கம்பனைப் போற்றுங்கள். இராமாயணத்தின் இலக்கியச் சிறப்புகளை எடுத்துரையுங்கள். அது உங்கள் விருப்பம். அரசியல் பேசுவதற்கும் உங்களுக்கு உரிமை உண்டு. ஆனால் அரசியல் கருத்துகளை முன்வைப்பவர்கள் அவற்றுக்கான வரலாற்று அறிவையும் சமூகப் பொறுப்பையும் கொண்டிருக்க வேண்டும். புலம்பெயர் தமிழர்களின் உதவிகளில் குறைகள் இருந்தால் சுட்டிக்காட்டுங்கள். அவற்றைச் சீர்செய்வதற்கான வழிகளைக் கூறுங்கள். தாயக மக்களின் பொருளாதார முன்னேற்றத்துக்கு ஆக்கபூர்வமான திட்டங்களை முன்வையுங்கள்.

ஆனால் உதவி செய்பவர்களையே ஏளனம் செய்துகொண்டு, உதவிகளை நிறுத்துமாறு அறிவுரை வழங்குவது பொறுப்புள்ள அணுகுமுறையல்ல. இறுதியாக ஒன்றை மட்டும் நினைவூட்ட விரும்புகிறேன். தமிழர்களின் வரலாறு கம்பராமாயணத்துடன் தொடங்கவில்லை. கம்பராமாயணத்துடன் முடிந்துவிடவும் போவதில்லை. அது ஓர் இனத்தின் மொழி, பண்பாடு, உரிமைகள், போராட்டங்கள், வெற்றிகள், தோல்விகள், இழப்புகள் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய நீண்ட வரலாறு.
அந்த வரலாற்றை மறக்கச் சொல்லும் உரிமை யாருக்கும் இல்லை. கம்பனின் கவிதைகளை நீங்கள் மறக்காமல் இருப்பது உங்கள் விருப்பம். தமிழர்களின் போராட்ட வரலாற்றை நாங்கள் மறக்காமல் இருப்பது எங்கள் உரிமை. கம்பனை வைத்துப் பிழைப்பு நடத்துங்கள். ஆனால் கம்பனின் பெயரால் தமிழர்களின் வரலாற்றை மறக்கச் சொல்லாதீர்கள்! வெளிநாட்டு உதவிகளை நிறுத்தச் சொல்லாதீர்கள்!

  
   Bookmark and Share Seithy.com


கனடாவின் புதிய போர் விமானத் தயாரிப்புத் திட்டம்:அவ்ரோ (Avro) காலத்து நினைவுகளும் அமெரிக்காவிற்கு ஏற்படும் சவால்களும்
[Wednesday 2026-02-25 21:00]

கனடாவின் வான்வெளிப் பாதுகாப்பு வரலாற்றில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஸ்வீடன் நாட்டின் சாப் (Saab) நிறுவனம், தனது கிரிப்பன் (Gripen E) போர் விமானங்களை கனடாவிலேயே முழுமையாகத் தயாரித்து, 7-க்கும் மேற்பட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் ஒரு பிரம்மாண்ட திட்டத்தை முன்வைத்துள்ளது. இது கனடாவை மீண்டும் ஒரு உலகளாவிய போர் விமான உற்பத்தி மையமாக மாற்றும் முயற்சியாகும். அவ்ரோ (Avro) பாரம்பரியமும் கசப்பான நினைவுகளும் கனடா போர் விமானங்களைத் தயாரிப்பது இது முதன்முறை அல்ல. 1950-களில் கனடா "அவ்ரோ ஆரோ" (Avro Arrow) என்ற அதிநவீன போர் விமானத்தைத் தயாரித்து உலகையே வியக்க வைத்தது. ஆனால், பல காரணங்களால் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. இருப்பினும், கனடாவின் அவ்ரோ (Avro Canada) நிறுவனம் தயாரித்த விமானங்கள் உலகெங்கும் பரவின.


முன்னோர்கள் யாழ்ப்பாணத்து மண்ணில் விதைத்த "கல்வி" எனும் விதை!
[Monday 2026-01-05 07:00]

உலக வரலாற்றில் ஒரு இனம் அதன் அறிவுத்திறனுக்காகவும் பொருளாதார செழுமைக்காகவும் வேட்டையாடப்பட்ட கதைகள் பல உண்டு. அதில் முதன்மையானது ஐரோப்பாவில் யூதர்களுக்கு நேர்ந்த கதி. இன்று அதே வரலாற்றுப் பக்கங்களை ஈழத்தமிழர்களின் வாழ்வியலோடு ஒப்பிட்டுப் பார்க்கையில், பல திடுக்கிடும் உண்மைகள் புலனாகின்றன. ஜேர்மனியில் யூதர்கள் சிறுபான்மையினராக இருந்தாலும், கல்வியிலும் வர்த்தகத்திலும் அவர்கள் அசைக்க முடியாத சக்தியாக இருந்தனர். வங்கித்துறை, மருத்துவம், சட்டம் என அனைத்து உயர் பதவிகளிலும் யூதர்களே கோலோச்சினர்.


உலகின் அதிகார மையமாக திகழும் அமெரிக்கா! Top News
[Monday 2026-01-05 07:00]

உலகின் அதிகார மையமாக அமெரிக்கா கடந்த 50 ஆண்டுகளாகத் திகழ்வதற்கு அதன் ராணுவ பலத்தை விடவும் அதன் "டொலர்" என்ற ஆயுதமே முக்கியக் காரணியாக இருந்து வருகிறது. இன்று வெனிசுலாவில் நடக்கும் நிகழ்வுகள், வெறும் ஒரு நாட்டின் உள்நாட்டுப் பிரச்சினை அல்ல, இது உலகப் பொருளாதாரத்தின் அச்சாணியாக இருக்கும் 'பெற்றோ-டாலர்' அமைப்பைக் காப்பதற்கான ஒரு சர்வதேச சதுரங்க வேட்டை எனவும் கூறலாம். முதலில் பெற்றோ-டாலர் (Petrodollar) என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.


மாமன் விதைத்த நஞ்சு, மருமகன் வளர்த்த வஞ்சகம், தமிழரசுக்கட்சியின் துரோகம்: இலங்கையை அரித்துத் தின்னும் அரசியல்!
[Wednesday 2025-12-03 07:00]

இலங்கைத் தீவு இன்று இயற்கை அனர்த்தத்தாலும், பொருளாதாரச் சிதைவாலும் நிலைகுலைந்து போயிருக்கிறது. இன்று ஆட்சியில் அனுர குமார திஸாநாயக்க அமர்ந்திருந்தாலும், நாடு இந்த மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டதற்கான வேர்கள் மிக ஆழமானவை. அந்த வேர்களைத் தேடிச் சென்றால், அது "மாமா ஜே.ஆர் - மருமகன் ரணில்" எனும் மையப்புள்ளியிலும், அவர்களுக்குக் காலங்காலமாக முண்டுகொடுத்த "தமிழரசுக்கட்சியின் சந்தர்ப்பவாதத்திலும்" வந்து நிற்கிறது. இயற்கை அனர்த்தம் ஒருபுறம் மக்களைக் கொன்று கொண்டிருக்க, இந்த இக்கட்டான நேரத்திலும் தங்கள் அரசியல் இருப்பை மட்டுமே யோசிக்கும் 'பொறுக்கித்தனம்' மிக்க அரசியலைத் தோலுரிக்கும் கட்டுரை இது.


இது ஒரு புதிய நெருக்கடி அல்ல: பல தசாப்தங்களாகப் பயன்படுத்தப்பட்ட பழைய அரசியல் விளையாட்டு!
[Thursday 2025-11-20 07:00]

திருகோணமலை புத்தர்சிலை விவகாரம் தொடர்பாக தமிழ், சிங்கள செய்தி ஊடகங்கள், சமூகவலைத்தள கருத்துகள் மூலம் அதன் இறுதிக்கட்டமே எனக்கு தெரிந்திருந்தது. ஆனால், அதன் ஆரம்பம், இடைநிலை கட்டங்களில் என்ன நடந்தது என்ற விளக்கம் எனக்கில்லாதபடியினால் அதனை பெற, இணையத்தில் இருந்த தகவல்களை தொகுத்து நான் வாசிக்க தயாரித்த "short notes" இது. திருகோணமலை சிலை விவகாரம் ---ஒரு சிலையையும் தாண்டி நாம் பார்க்க வேண்டிய 5 அதிர்ச்சியூட்டும் உண்மைகள் உலகம் விஞ்ஞானத்திலும் தொழில்நுட்பத்திலும் எங்கோ முன்னேறிச் சென்று கொண்டிருக்க, நம் நாட்டின் 'சிஸ்டம்' மட்டும் ஏன் இப்படி தேங்கிப் போயிருக்கிறது? இதுதான் மாற்றவே முடியாத நமது விதியா?


கனடாவின் புதிய பிரதமர் Mark Carney.
[Monday 2025-03-10 22:00]

இன்று நடைபெற்ற Liberal கட்சியின் தலைமைக்கான தேர்தலில் வெற்றி பெற்று Liberal கட்சித் தலைவராக தெரிவான Mark Carney கனடாவின் புதிய பிரதமராகவும் நியமிக்கப்படுகின்றார். கனேடிய பிரதமர் Justin Trudeau வின் பதவி விலகலுக்கும் இவருக்கும் இடையில் நெருக்கமான தொடர்புகள் இருக்கின்றன. சரிவடைந்துள்ள கனேடிய பெருளாதாரத்தை துக்கி நிறுத்துவார் என்ற நம்பிக்கையுடன் கனேடிய அரசியலுக்குள் வலிந்து அழைத்துவரப்பட்டவர் Mark Carney.


ஒரு இமாலய முட்டாள்தனம் Top News
[Tuesday 2024-01-02 09:00]

பொறுப்புக்கூறல் மற்றும் அரசியல் மறுசீரமைப்புகளில் கால் இழுப்பதற்கு உலகத் தமிழர் பேரவை அரசாங்கத்திற்கு இன்னுமொரு காரணத்தை வழங்கியுள்ளது.


இமாலயப் பிரகடனம் யாருக்குச் சேவகம் செய்யும்....? Top News
[Friday 2023-12-29 01:00]

இமாலயப் பிரகடனத்தைச் செய்ததன் மூலம், உலகத் தமிழர் பேரவை புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகள் மத்தியில் பெருமளவுக்குத் தனிமைப்படுத்தப்பட்டு விட்டது. அந்த அமைப்புடன் இணைந்து மகிந்தவைச் சந்தித்த கனேடியத் தமிழ்க் காங்கிரஸின் சில உறுப்பினர்கள் கனடாவில் கடுமையாக விமர்சிக்கப்படுகின்றார்கள்.


ஏழ்மையைக் கண்டு ஒதுங்குவதும் துன்பத்தைக் கண்டு விலகுவதும் மனித பண்பல்ல என்றனர் ஆன்றோர். Top News
[Friday 2023-09-29 20:00]

எமது தாயகத்திலே அரவணைப்போர் என்று எவரும் இன்றி அனாதரவாகவும் நிற்கதியாகவும் போரின் வடுக்களுக்களைச் சுமந்தவாறும் பொருளாதார வெறுமையில் சிக்கித் தவித்த வாறும் உடலியல் உழவியல் என்ற வகையிலும் சொல்லொணா உபாதைகளுக்கு உள்ளாகி எவரேனும் மனமிரங்கி கை தூக்க வாராரோ எனும் அங்கலாய்ப்புடனும் ஏக்கங்களுடனும் அன்றாடம் துயருற்றிருக்கும் எம் பிறந்த மண் உடன் பிறப்புக்களோ எண்ணற்றவை.


இலங்கையில் சர்வாதிகார சனாதிபதிக்குப் பதிலாக ஒரு கொடுங்கோலன் நியமனம்!
[Saturday 2022-08-27 08:00]

பல ஆண்டுகளாக எண்பித்துக் காட்டியது போல், தற்போதைய அரசியல்வாதிகளுக்கு, வாக்காளர்கள் மற்றும் நாட்டின் நலனில் அக்கறை இல்லை. எவரும் நாட்டை முதன்மைப் படுத்துவதாகத் தெரியவில்லை. சரியான திட்டமிடல் மற்றும் நாட்டை அபிவிருத்தி செய்வதற்கும், அதற்கு ஆதரவான சட்டத்தைக் கொண்டு வருவதற்கும் பதிலாக, இளைஞர்கள் மற்றும் வயதான அரசியல்வாதிகள் திட்டமிட்ட முறையில் இன மற்றும் மதப் பிளவுகளையும் குழுக்களுக்குள் விரோதங்களையும் சுயலாபத்திற்காக திசைதிருப்பும் தந்திரோபாயங்களாக ஊக்குவித்தார்கள்.


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா