Untitled Document
November 5, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
தமிழின அழிப்பு நினைவுநாள் 2024 - யேர்மனி 18.05.2024! Top News
[Tuesday 2024-05-21 06:00]

18.05.2024 சனிக்கிழமை அன்று முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 15ஆவது ஆண்டு நினைவுநாள் யேர்மனியின் டுசில்டோவ் (Düsseldorf)நகரில் பேரெழுச்சியோடு நினைவு கூரப்பட்டது. பிற்பகல் 14:30 மணிக்கு நகரமத்தியில் பெருந்திரளான மக்களோடு ஆரம்பமாகிய பேரணி, தமிழ் இளையோர் அமைப்பின் ஒருங்கிணைப்பிலும் தமிழாலயங்களது ஒப்பனையும் பாவனையும் எனும் வடிவத்தில் முள்ளிவாய்க்கால் காட்சிப்படுத்தல்களோடும் மத்திய மாநிலத்தில் அமைந்துள்ள மாநில நாடாளுமன்றத்தினை நோக்கிப் பேரெழுச்சியோடு நகரத் தொடங்கியது. பேரணி செல்லும் வழியெங்கும் கூடி நின்ற வேற்றின மக்களுக்கு இளையவர்கள் துண்டுப்பிரசுரங்களை வழங்க, பேரணியில் கலந்து கொண்ட மக்கள் வானதிர கொட்டொலிகள் எழுப்பியவாறும் சென்றனர். பிற்பகல் நான்கு மணிக்கு மாநில நாடாளுமன்றத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவிடத்தினைப் பேரணி வந்தடைந்தது.

முள்ளிவாய்க்கால் நினைவுத்திடல் மக்கள் வெள்ளத்தில் நிறைந்திருக்க, நீண்ட காலமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கி வருகின்ற அருட்தந்தை அல்பெர்ட் கோலன் (Albert Koolen) அவர்கள் பொதுச்சுடரினை ஏற்றி வைத்து வணக்க நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தார். தொடர்ந்து மாவீரர்கள் மற்றும் பொதுமக்களிற்கான நினைவிடங்களிற்கு முன்பாக ஈகைச்சுடர் ஏற்றி வைக்கப்பட்டது. ஈகைச்சுடரினை 14.04.2009 அன்று புதுக்குடியிருப்பு மாத்தளன் பகுதியில் சிறிலங்கா இராணுவத்துடனான மோதலின்போது வீரச்சாவடைந்த மாவீரர் வீரவேங்கை ராதையன் என்றழைக்கப்படும் செல்லத்தம்பி மயூரன் மற்றும் 21.01.2009 அன்று ஒட்டுசுட்டான் பகுதியில் சிறிலங்கா இராணுவத்துடனான மோதலின்போது வீரச்சாவடைந்த மாவீரர் கப்டன் ராதையன் என்றழைக்கப்படும் செல்லத்தம்பி செந்தூரன் ஆகியோரின் சகோதரரும் ,ஏழு சொந்தங்களை இனவழிப்பின் போது பறிகொடுத்தவருமான செல்வன் செல்லத்தம்பி நிறோஜன் அவர்கள் ஏற்றி வைத்தார்.

தொடர்ந்து மாவீரர் நினைவுப்படத்திற்கான மலர்மாலையினை 13.07.2008 அன்று மன்னார் பாலமோட்டையில் சிறிலங்கா இராணுவத்துடனான நேரடி மோதலின்போது வீரச்சாவடைந்த போர் உதவிப்படை வீரர் சுப்பிரமணியம் சத்தியபாலன் அவர்களின் மகன் செல்வன். சத்தியபாலன் மயூரன் அவர்களும் பொதுமக்கள் நினைவுப் படத்திற்கான மலர் மாலையினை முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் நேரடிச் சாட்சியமாக விளங்கிய திருமதி. தீபா இரவிச்சந்திரன் அவர்களும் அணிவித்தனர். இதனைத்தொடர்ந்து வருகை தந்திருந்த மக்கள் அனைவரும் சூடம் ஏற்றி, மலர் தூவி வணங்கினர். அகவணக்கத்தோடு டோட்முண்ட் (Dortmund) தமிழாலய மாணவன் ஸ்ரேபான் அயூடிக் வசந்தராஜ் அவர்களதும், லிவக்கூசன் (Leverkusen) தமிழாலய மாணவி சித்திரா வினோதன் அவர்களுதும் கவி வணக்கமும் மதரக்குரலோன் திரு. கண்ணன் அவர்களது இசை வணக்கமும் இடம்பெற்றது.

நினைவு வணக்க நிகழ்வில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பற்றிய விளக்க உரை வழங்கப்பட்ட பின்பு முள்ளிவாய்க்கால் இறுதி நாள்களின் சுவடுகள் எனும் தலைப்பில் திருமதி. தீபா இரவிச்சந்திரன் அவர்கள் உரையாற்றினார். இன அழிப்பின் வலிகள் நிறைந்த பாடலிற்கு Frankfurt நகரின் இளைய மாணவர்கள் உணர்வோடு நடனம் வழங்கிய பின்னர் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் Frau ஒஸ்லேம் டிமீறல் அவர்களின் சார்பில் திரு. Hannis Dräger அவர்கள் உரையாற்றினார். தொடர்ந்து யேர்மன் குருதிஸ்தான் அமைப்பின் சார்பாக Frau மேடியா அவர்களும் உரையாற்றினார். யேர்மன் தமிழ் பெண்கள் அமைப்பினால் முள்ளிவாய்க்காலே திறவுகோல் எனும் நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது. நூல் அறிமுக உரையினை வழங்கிய திருமதி. தீபா இரவிச்சந்திரனிடமிருந்து நூலின் முதல் பிரதியினை யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் Dortmund நகரக் கோட்டப் பொறுப்பாளர் திரு. பாலகிருஸ்ணன் அவர்கள் பெற்றுக்கொண்டார்.

நூலின் இரண்டாவது பிரதியைப் பெற்றுக்கொண்ட திரு. Albert Koolen அவர்கள் நினைவுரையினையும் வழங்கினார். யேர்மன் தமிழ் இளையோர் அமைப்பினது வடிவமைப்பில் முள்ளிவாய்க்கால் இன அழிப்பினைச் சித்தரிக்கும் யேர்மன் மொழியிலான நாடகம் பார்த்தோர் மனங்களை நெகிழச் செய்தது. யேர்மன் கலை பண்பாட்டுக் கழக ஆசிரியர்களில் ஒருவரான செல்வன்.நிமலன் சத்தியகுமாரின் மாணவர்கள் “ஓலம் கேட்டதா அலை ஓசை கேட்டதா” எனும் பாடலிற்கு உணர்வுபொங்க நடனமாடினர். தமிழர் கலைப்பண்பாட்டுக்கழகம் அனைத்துலகத்தொடர்பகத்தினால் நடாத்தப்பட்ட தமிழின அழிப்பு தொடர்பான கலைத்திறன் போட்டிகளில் யேர்மன் நாட்டில் கலந்துகொண்ட மாணவர்களுக்கும், வெற்றியீட்டிய மாணவர்களுக்கும் மதிப்பளிப்பு வழங்கப்பட்டது.

மதிப்பளிப்பினை யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் பொறுப்பாளர் திரு.சிறீ இரவீந்திரநாதன் அவர்கள் வழங்கினார். முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 15 ஆவது ஆண்டின் வணக்க நிகழ்வில் சிறப்புரையினை திரு. இரா. கதிரவன் (விபி)அவர்கள் வழங்கினார். தொடர்து தமிழ் இளையோர் அமைப்பினைச் சேர்ந்த அனைவரும் ஒருமித்து நின்றபடி உறுதிமொழியினைச் செல்வி.வானதி அவர்கள் வாசிக்க மக்கள் அனைவரும் உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர். நிறைவாக “நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்” எனும் பாடலோடும் “தமழரின் தாகம் தமிழீழத் தாயகம்” எனும் தாரக மந்திரத்தோடும் தமிழின அழிப்பு நினைவு நாள் 2024 வணக்க நிகழ்வுகள் எழுச்சியோடு நிறைவு பெற்றது.

  
  
   Bookmark and Share Seithy.com



கனடாவில் இலங்கைத் தமிழ் பாடகி லக்ஷ்மிக்கு புதிய அங்கீகாரம்! Top News
[Tuesday 2026-11-03 07:00]

இலங்கைத் தமிழ் பின்னணியைக் கொண்ட கனடா வாழ் பாடகி லக்ஷ்மி சிவநேஸ்வரலிங்கம் (Luksimi Sivaneswaralingam), 2026ஆம் ஆண்டுக்கான South Asian Music Accelerator (SAMA) இசை மேம்பாட்டுத் திட்டத்திற்குத் தெரிவாகியுள்ளார். கனடா முழுவதிலும் இருந்து தெரிவு செய்யப்பட்ட பத்து இசைக் கலைஞர்களில் ஒருவராக லக்ஷ்மி இடம்பெற்றுள்ளார்.



உலகளாவிய தமிழர் பொருளாதார மற்றும் சமூக வலையமைப்பு அறிமுகம்! Top News
[Sunday 2026-10-25 17:00]

அனைத்துலகத் தமிழர் பேரவை (FGT), உலகத் தமிழர்களின் அறிவு, ஆற்றல், தொழில்சார் அனுபவம் மற்றும் பொருளாதார வளங்களை ஒருங்கிணைக்கும் நோக்கில், உலகளாவிய தமிழர் பொருளாதார மற்றும் சமூக வலையமைப்பையும் (Global Tamil Economic and Social Network), அதன் ஒருங்கிணைப்புக் குழுவையும் அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியடைகிறது. உலகெங்கிலும் வாழும் தமிழ்ப் பேராசிரியர்கள், பொருளாதார நிபுணர்கள், தொழில்முனைவோர், முதலீட்டாளர்கள், தொழில்சார் வல்லுநர்கள் மற்றும் நிறுவனங்களை ஒன்றிணைத்து, பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், தொழில்முனைவையும் வேலைவாய்ப்புகளையும் உருவாக்குதல், சமூக மேம்பாட்டை முன்னெடுத்தல் ஆகியவை இவ்வலையமைப்பின் முக்கிய நோக்கங்களாகும்.



டொரோண்டோ தமிழ் புத்தக அரங்கம் 2026! Top News
[Sunday 2026-10-25 06:00]

அக்டோபர் மாதம் 24 மற்றும் 25ஆம் திகதிகளில், 90 Littles Road, Scarborough-வில் அமைந்துள்ள Malvern Family Resource Centreஇல், நண்பகல் 12 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெற உள்ளது. புத்தகங்களின் காட்சிப்படுத்தல் மற்றும் விற்பனையுடன் இந்த ஆண்டு 10 நூல் அறிமுகங்கள், கலை இலக்கிய அமர்வுகள் என புத்தகங்களுடன் தொடர்புடைய பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற உள்ளன.



திரு. வைரமுத்து சொர்ணலிங்கத்திற்கு ரொறன்ரோ சர்வதேச தமிழ்த் திரைப்பட விழாவின் வாழ்நாள் சாதனையாளர் விருது! Top News
[Monday 2026-10-05 09:00]

தமிழ்க் கனடிய கலை மற்றும் இசைத்துறையில் கடந்த 35 ஆண்டுகளாக தொடர்ச்சியான பங்களிப்பை வழங்கி வரும் திரு. வைரமுத்து சொர்ணலிங்கம் அவர்களுக்கு, 7வது ரொறன்ரோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா – 2026 இன் வாழ்நாள் சாதனையாளர் விருது (Lifetime Achievement Award) வழங்கி கௌரவிக்கப்பட்டது. ரொறன்ரோ தமிழ் சர்வதேச திரைப்பட விழாவின் 7வது ஆண்டு நிகழ்வுகள் கடந்த செப்டம்பர் 25 முதல் 27ஆம் திகதி வரை நடைபெற்றன. செப்டம்பர் 25ஆம் திகதி யோர்க் சினிமாவில் ஆரம்ப விழா இடம்பெற்றதுடன், தொடர்ந்து இரண்டு நாட்கள் பல்வேறு மொழிகளைச் சேர்ந்த திரைப்படங்கள் மற்றும் குறும்படங்கள் திரையிடப்பட்டன.



துணுக்காயில் கோலாகலமாக நடைபெற்ற "பண்பாட்டுப் பெருவிழா – 2026"! Top News
[Friday 2026-09-25 16:00]

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகும் துணுக்காய் பண்பாட்டுப் பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்த “துணுக்காய் பிரதேச பண்பாட்டுப் பெருவிழா – 2026” நிகழ்வு 2026 செப்டெம்பர் 22ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணிக்கு, துணுக்காய் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் அமைந்துள்ள “கலைத் திலகம் அமரர் புவனேஸ்வரி நடராசா அரங்கில்” கோலாகலமாக நடைபெற்றது. துணுக்காய் பிரதேச செயலாளர் இராமதாஸ் ரமேஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக சிவராஜசிங்கம் ஜெயகாந்த், மேலதிக மாவட்டச் செயலாளர் – காணி, முல்லைத்தீவு மாவட்ட செயலகம் கலந்து சிறப்பித்தார்.



மெத்ரேயி ராமகிருஷ்ணன் – வாழ்க்கைக் கதை! Top News
[Friday 2026-09-25 10:00]

மெத்ரேயி ராமகிருஷ்ணன் ஒரு தமிழ் கனடிய நடிகை. அவர் 2001ஆம் ஆண்டு கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள மிசிசாகாவில் பிறந்தார். அவரது பெற்றோர் இலங்கைத் தமிழர்கள். சிறுவயதிலிருந்தே நடிப்பில் ஆர்வம் இருந்தாலும், ஆரம்பத்தில் அவர் தொழில்முறை நடிகையாக இருக்கவில்லை. 2020ஆம் ஆண்டு Netflix-ல் வெளியான Never Have I Ever தொடரில் Devi Vishwakumar என்ற கதாபாத்திரத்தில் நடிக்க ஆயிரக்கணக்கானவர்கள் audition செய்தனர். மெத்ரேயியும் audition கொடுத்தார். இறுதியில், 15,000-க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்களில் இருந்து அவர் முக்கிய கதாபாத்திரத்திற்குத் தேர்வு செய்யப்பட்டார். இந்தத் தொடர்தான் அவருடைய முதல் பெரிய நடிப்பு வாய்ப்பு. Devi என்ற கதாபாத்திரம் மூலம் உலகம் முழுவதும் அவர் பிரபலமானார்.



தியாக தீபம் திலீபன் நினைவேந்தல்! Top News
[Wednesday 2026-09-16 07:00]

12 நாட்கள் பசிமறந்து நல்லூர் வீதியில் உயிர்துறந்த தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் உணர்வுபூர்வமாக ஆரம்பமாகியுள்ளன. தியாக தீபம் திலீபன் அவர்கள், 1987ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை, நல்லூர் ஆலய முன்றலில் நீராகாரம்கூட அருந்தாமல், அகிம்சை வழியில் தனது ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டார்.



துன்னாலை சதாசகாய அன்னை ஆலய வருடாந்த திருவிழா திருப்பலியுடன் நிறைவு! Top News
[Monday 2026-09-14 08:00]

யாழ் துன்னாலை சதாசகாய மாதா ஆலயத்தின் வருடாந்த திருவிழா நேற்று நிறைவடைந்தது. திருப்பலிகள் பங்குத்தந்தை விஜின்ரஸ் மற்றும் உதவி பங்குத்தந்தை பஸ்ரியான் அவர்களால் நடாத்தப்பட்டது. ஆலய வாசலிலே ஏற்றப்பட்ட மெழுகுவர்த்திகள் ஆசிர்வதிக்கப்பட்டு பவனியாக ஆலயத்திற்கு கொண்டு வரப்பட்டு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.



வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடி ஆர்ப்பாட்டம்! Top News
[Thursday 2026-09-03 07:00]

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எமது தமிழ் உறவுகளுக்கு நீதி கோரி, பிரித்தானிய இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் (Sri Lankan High Commission) முன்னால் மாபெரும் கண்டனப் போராட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திலிருந்து பிரித்தானிய பிரதமரின் அலுவலகமான 10 Downing Street நோக்கி மாபெரும் போராட்ட ஊர்வலமாகச் சென்று, உறவுகளுக்கான நீதியையும் இப்படுகொலை நாடக அரங்கமும் இடம்பெற்றது.



சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில், பிரித்தானியாவில் நீதிக்காகத் திரண்ட மக்கள்! Top News
[Wednesday 2026-09-02 07:00]

தாயகத்தில் 1990ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளை நினைவுகூர்ந்தும், அவர்களுக்கான உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை வலியுறுத்தியும், பிரித்தானியாவில் நேற்று ஆகஸ்ட் 30ஆம் திகதி நினைவேந்தல் நடைபயணமும் அமைதிவழிப் போராட்டமும் இடம்பெற்றது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில், லண்டன் Trafalgar Square மற்றும் லிவர்பூல் ஆகிய இடங்களில் நடைபெற்ற நிகழ்வுகளில், பெருமளவான தமிழ் சமூகத்தினர், ஆதரவாளர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.



யாழில் PickMe நடத்துவது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் MA சுமந்திரனா? Top News
[Thursday 2026-08-20 08:00]

கடந்த காலத்தில் மிகவும் பேசும் பொருளாக இருந்த பிக்மி முச்சக்கர வண்டி சங்கங்களால் அதிகம் பேசப்பட்டது அப்போது இது யாழ்ப்பாணத்தில் முன்னால் கடல்தொழில் அமைச்சர் திரு டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நடத்துவதாகவும் கூறப்பட்டது ஆனால் இறுதியில் வந்த தகவலின் அடிப்படையில் இந்த நிறுவனத்தின் ஒரு முக்கிய வழக்கறிஞர்களில் ஒருவரான திரு MA சுமந்திரன் அவர்கள் மறைமுகமாக நடத்துவது தெளிவாக தெரியவந்தது.



தமிழ் ஒலிம்பிக் 2027 திட்டத்தை அங்குரார்ப்பணம் செய்தது நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்! Top News
[Wednesday 2026-08-19 09:00]

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில், தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் நினைவாக 11வது ஆண்டு கோடைகால விளையாட்டு விழா, 02.08.2016 ஞாயிற்றுக்கிழமை Sutton பகுதியில் அமைந்துள்ள St Helier Open Space மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விளையாட்டு விழாவில் கரப்பந்தாட்டம், வலைப்பந்தாட்டம், மென்பந்து துடுப்பாட்டம், சிறுவர்களுக்கான விளையாட்டுக்கள் மற்றும் ஆண், பெண் இருபாலருக்குமான பாரம்பரிய விளையாட்டுக்கள் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் இடம்பெற்றன. இதன் மூலம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு வயதுப் பிரிவினரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.



வருங்காலத் தமிழ் ஈழம் சுவிட்சர்லாந்திடமிருந்து என்ன கற்றுக்கொள்ள முடியும்? Top News
[Saturday 2026-08-15 07:00]

தமிழ் தாயகத்தின் எதிர்காலம் குறித்த விவாதம், நிலப்பரப்பின் அளவு என்ற கேள்வியோடு மட்டும் நின்றுவிடக் கூடாது. புவியியல் ரீதியாகச் சிறிய ஒரு நாடு, திறமையான நிறுவனங்கள், சர்வதேச சந்தைகளுக்கான அணுகல், கல்வியறிவு பெற்ற மக்கள் மற்றும் தனது சொந்தப் பொருளாதாரக் கொள்கைகளை வகுக்கும் திறன் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்போது, ​​கணிசமான பொருளாதார செல்வாக்கை உருவாக்க முடியும் என்பதை சர்வதேச அனுபவம் காட்டுகிறது. சுவிஸ் வரலாற்றாசிரியர் ஜேக்கப் டானரின் Krisen und Konjunkturen des Kapitalismus in der Schweiz des 20. Jahrhunderts என்ற ஆய்வு, இந்தக் கேள்வியைக் கருத்தில் கொள்வதற்கான ஒரு சுவாரஸ்யமான உதாரணத்தை வழங்குகிறது.



ஒன்ராறியோ அரசு சென்டினரி மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவு விரிவாக்கத்திற்காக 82 மில்லியன் டொலர் முதலீடு செய்கிறது! Top News
[Friday 2026-08-07 07:00]

கடந்த செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 4 அன்று, ஸ்காபரோ ரூஜ் பார்க் சட்டமன்ற உறுப்பினரும் சுகாதார இணை அமைச்சருமான விஜய் தணிகாசலம் அவர்கள், துணை முதல்வரும் சுகாதார அமைச்சருமான சில்வியா ஜோன்ஸ் மற்றும் ஸ்காபரோ சட்டமன்ற உறுப்பினர்கள் ரேமண்ட் சோ, டேவிட் ஸ்மித் ஆகியோருடன் இணைந்து, ஸ்காபரோ சுகாதார வலையமைப்பின் சென்டினரி மருத்துவமனையில் புதிய மற்றும் விரிவாக்கப்பட்ட அவசர சிகிச்சைப் பிரிவுக்கான கட்டுமானப் பணிகளை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார்.



17ஆவது ஆண்டு தமிழ் கனடிய நடைப்பயணம் உத்தியோகபூர்வமாகத் தொடக்கம்: இந்தியாவில் இருந்து இலங்கை திரும்பும் தமிழ் குடும்பங்களுக்கு மறுவாழ்வு அளிக்க நிதியுதவி! Top News
[Sunday 2026-08-02 07:00]

கனடியத் தமிழர் பேரவை (CTC), சர்வதேச மருத்துவ சுகாதார நிறுவனம் (IMHO) கனடா மற்றும் இலங்கை அகதிகள் மறுவாழ்வுக் கழகம் (OfERR) ஆகிய அமைப்புகள் ஒன்றிணைந்து, 16ஆவது ஆண்டு தமிழ் கனடிய நடைப்பயணத்தை ஜூலை 29, 2026 அன்று உத்தியோகபூர்வமாகத் தொடங்கியுள்ளன. ஒற்றுமை, நம்பிக்கை மற்றும் உயரிய நோக்கத்தை மையமாகக் கொண்டுள்ள இப்பிரச்சாரம், ஒட்டுமொத்த சமூகத்தையும் ஒரு மனிதாபிமான இலக்கின் கீழ் திரட்டியுள்ளது. இந்த ஆண்டுக்கான நடைப்பயணம் வரும் செப்டம்பர் 13, 2026 ஞாயிற்றுக்கிழமையன்று, ஒன்ராறியோவின் பிக்கரிங் நகரில் உள்ள பிரெஞ்சுமேன்ஸ் பே, மில்லினியம் ஸ்கொயர் பூங்காவில் (Millennium Square Park, Frenchman’s Bay in Pickering, Ontario) நடைபெறவுள்ளது. இந்தியாவில் பல வருடங்களாக இடம்பெயர்ந்து வாழ்ந்து, தற்போது தாமாகவே முன்வந்து தங்களின் சொந்த ஊரான திருகோணமலைக்குத் திரும்பும் 30 தமிழ் குடும்பங்கள் மற்றும் தனிநபர்களின் மறுவாழ்வுக்கு ஆதரவளிப்பதே இந்த ஆண்டுக்கான முதன்மை நோக்கமாகும்.


 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா