Untitled Document
November 7, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
மாவீரர் நாள் 2020 ஈகியர் நினைவேந்தல் – சீமான் இன மீட்சியுரை! Top News Top News
[Sunday 2020-11-29 07:00]

நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ஆயிரமாயிரம் ஆண்டுகள் அடிமையாக வாழ்வதைவிட, சுதந்திரமாகச் சாவது மேலானது; அதுவும் அந்த சுதந்திரத்திற்காகப் போராடிச் சாவது அதைவிட மேலானது! – என்று நம் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் இலட்சிய முழக்கங்களுக்கேற்ப தமிழீழ விடுதலைக்காகத் தம் இன்னுயிரையே கொடையாகக் கொடுத்த நம் மாவீரர்களின் நினைவைப் போற்றும் மாவீரர் நாள் ஈகியர் நினைவேந்தல் நிகழ்வு 27-11-2020 அன்று சென்னை, போரூரிலுள்ள ஸ்ரீ ஈஸ்வரி திருமண அரங்கில் நடைபெற்றது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் இன மீட்சியுரை நிகழ்த்தினார்.

இந்நிகழ்வில் மாநில ஆட்சிமொழிப் பாசறைச் செயலாளர் தனித்தமிழ்வேங்கை மறத்தமிழ்வேந்தன், மாநில மருத்துவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் இளவஞ்சி, மருது மக்கள் இயக்கத்தலைவர் முத்துப்பாண்டி, தமிழர் நலப் பேரியக்கத் தலைவர் மு.களஞ்சியம், நாம் தமிழர் கட்சியின் பொதுச்செயலாளர் தடா சந்திரசேகர் ஆகியோர் உரையாற்றினர்.

முன்னதாக குருதிக்கொடைப் பாசறை சார்பாக நடைபெற்ற குருதிக்கொடை முகாமில் நாம் தமிழர் உறவுகள் பலர் குருதிக்கொடை வழங்கினர். மாலை 6.10 மணிக்கு மாவீரர் சுடர் ஏற்றப்பட்டு மாவீரர் பாடல் ஒலிக்கத் தொடங்கியது. பின்னர், மாவீரர்களுக்கு மலர் வணக்கமும், சுடர் வணக்கமும், வீர வணக்கமும் செலுத்தப்பட்டப் பின்னர், தமிழீழத்தேசியக் கொடியும், நாம் தமிழர் கட்சியின் கொடியும் ஏற்றி வைக்கப்பட்டு, மாவீரர் நாள் உரைவீச்சு தொடங்கியது. இந்நிகழ்வில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இராவணன், அன்புத்தென்னரசன், கதிர் இராஜேந்திரன், களஞ்சியம் சிவக்குமார், மாநிலச் செய்திப்பிரிவு செயலாளர் பாக்கியராசன், தலைமை நிலையச் செயலாளர் செந்தில்குமார் மற்றும் மாவட்ட, தொகுதிப் பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகளும் பொதுமக்களும் பேரெழுச்சியாக இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

மாவீரர் நாளையொட்டி சீமான் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

என் தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம். இன்று நவம்பர் 27.மாவீரர் நாள். நமது தாய்மண் விடுதலைக்காகத் தன்னுயிரைத் தந்து விதையாக விழுந்து விண்ணேறிச் சென்ற வீர மறவர்களின் புனித நாள். தாயக விடுதலையை உயிர் மூச்சாகக் கொண்டு, தன் மூச்சை விடுதலை தானமாகத் தந்து உலகத் தமிழர்கள் அனைவருக்கும் சுதந்திரத் தாகம் கமழ்கிற உள்ள பெருமூச்சாய் மாறிப்போன மாவீரர்களின் மகத்தான தியாக நாள். இந்தக் கார்த்திகை நாள்தான் காந்தள் மலர் சூட்டி, கந்தக நெருப்பாய் காற்றில் கலந்துபோன, வீர காவியங்களாய் நம் விழிகளில் உறைந்திருந்து நாம் வழிபடும் தெய்வங்களாக மாறியிருக்கிற நமது மாவீரர் தெய்வங்களுக்கான வழிபாட்டு நாள்.

உலக வரலாறு எத்தனையோ மாவீரர்களைத் தியாகச் சீலர்களைத் தனது பெரும் பயணத்தில் கண்டிருக்கிறது. ஆனால், தமிழர்களின் தாய் நிலமான தமிழீழத்தில், தாய்மண் விடுதலைக்காகத் தோன்றிய நம் மாவீரர்கள் போல இதுவரை இந்த உலக வரலாறு யாரையும் கண்டதில்லை. உயிர்போகும் எனத் தெரிந்தும் உவகைப் பெருகும் உள்ளத்தோடு, புன்னகை மாறாத முகத்தோடு, கண்களில் சுமக்கும் இலட்சியத்தோடு, நச்சுக்குப்பிப் பின்னப்பட்ட கயிற்றையே பதக்கமாக அணிந்து எதிரியின் கோட்டையினை மண்ணோடு மண்ணாகத் தகர்த்து, தங்கள் புகழை இந்தப் புவியில் விதைத்துக் காற்றில் கலந்தவர்கள் எங்கள் மாவீரர்கள்.

இதுவரை இந்தப் பூமிப்பந்து சந்தித்திராத அறம் வழி நின்று மறம் கற்பித்த பெரும் புகழ் சான்றோன் எங்கள் தேசியத் தலைவர் என் உயிர் அண்ணன் மேதகு வே. பிரபாகரன் அவர்களால் படிப்படியாய் உருவாக்கப்பட்டு, எந்தக் கொடும் சூழலிலும், மாறாத மனஉரம் நிறைந்த மனிதர்களாக ‌ உருவாகி விடுதலை வேட்கையோடு சிங்கள இனவாத அரசின் கையில் சிக்கிக் கொண்டிருக்கிற தமிழீழ தேசத்தை மீட்க வந்த மண் மீட்பு புரட்சியாளர்கள்தான் எங்கள் மாவீரர்கள்.

உலக நாடுகளின் படை அணிகளில் எத்தனையோ வகை வகையான படையணிகள் உண்டு. அலையலையாய் அணிவகுத்து நிற்கிற வீரர்களின் எண்ணிக்கை உண்டு. அங்கே அணிவகுத்து நிற்கிற அனைத்து வீரர்களும் உயிர் காக்க கவசம் அணிந்து, நவீன உடைகள் அணிந்து, உயிர் பாதுகாப்பு எண்ணத்தோடு வரிசையில் நிற்கிறார்கள். ஆனால், எங்கள் மாவீரர்களோ தன் இனத்தின் விடுதலைக்காகத் தங்களின் உயிர்தான் விலை என்பதை உணர்ந்து, அந்த உயிரைக் கொடுத்தால்தான் அதனையும் தாண்டிய விடுதலை கிடைக்கும் என்பதைப் புரிந்து தாய்மண் விடுதலைக்காகத் தங்கள் இன்னுயிரை இழக்கப் போட்டி போட்டுக்கொண்டு வரிசையில் நின்றார்கள்.

எம் மாவீரர்களின் வீரம் இதுவரை இந்த உலகம் அறியாதது. பெரும்புகழ் கொண்டது. இலங்கை, இந்தியா போன்ற நாடுகளின் இராணுவப் பலத்தையே சுக்கு நூறாக உடைத்தெறிந்து காட்டியவர்கள் எங்கள் மாவீரர்கள். 40 வருடங்களுக்கு மேலாக சிங்கள இனவாத அரசின் அனைத்து விதமான இராணுவக் கட்டமைப்புகளை உடைத்தெறிந்து மக்களைப் பாதுகாக்க களத்திலே நின்றவர்கள் எங்கள் மாவீரர்கள்.

மாவீரர்களின் வீரத்தை அறிந்த சிங்கள இனவாதஅரசு உலகம் முழுக்க ஓடி ராணுவ உதவிக்காகக் கையேந்தி நின்றதை நாம் கடந்த காலத்தில் கண்டோம். உலக வல்லாதிக்க நாடுகள் அனைத்தும் சேர்ந்து கொண்டு உள்ளங்கை அளவு நாடாக இருந்தாலும் வீரத்திலே உயர்ந்து நின்ற எங்கள் தாய் நாடான தமிழீழ நாட்டைப் பாதுகாத்த எமது தேசிய ராணுவமான விடுதலைப் புலிகளை எதிர்த்து நின்றன.

இரண்டு நாடுகளுக்கிடையே போர் நடக்கும்போதுகூடப் பயன்படுத்தக்கூடாத தடை செய்யப்பட்ட ஆயுதங்கள், கொத்து எரிகுண்டுகள், நச்சு வாயுக்கள் என அனைத்தையும் பயன்படுத்தி எங்கள் தாயக விடுதலைப்போராட்டத்தை சிங்கள பேரினவாத அரசும், உலக வல்லாதிக்க நாடுகளும் தற்காலிகமாக முறியடித்து இருக்கின்றன.

இந்த உலகில் வாழ்கின்ற தமிழர் என்கின்ற தேசிய இனத்தின் 12 கோடி மக்களின் விடுதலைக்கோரிக்கையை உலக அரங்கு எந்த நியாயமுமின்றிப் புறக்கணித்து இருக்கிறது. எம் தமிழ் ஈழ நாட்டில் கடந்த 2009ல் நிகழ்ந்த இனப்படுகொலைக்கான விசாரணையை முன்னெடுக்க எந்தவொரு நாடும் ஆதரவுக்கரம் நீட்டாதாதது வேதனையானது . சமகாலத்தில் பல இலட்சக்கணக்கான மக்கள் விடுதலை கேட்டுப் போராடினார்கள் என்ற ஒரே காரணத்திற்காக இனப்படுகொலை செய்யப்பட்டு அழிக்கப்பட்டார்கள் என்ற செய்தியை இந்த உலகத்தில் இருக்கின்ற எந்த ஒரு நாடும் கண்டு கொள்ளக்கூட இல்லை என்பதுதான் மிக மிகக் கொடுமையானது.

இதன்மூலம் நாம் அறிகின்ற செய்தி இந்த உலகத்தால் அனைத்து நிலைகளிலும் கைவிடப்பட்ட, அழித்தொழிக்கப்பட்ட, கேட்பாரற்ற ஒரு அடிமைத்தேசிய இனமாகத் தமிழினம் விளங்குகிறது என்பதுதான். எங்களது ஈழப்பெரு நாட்டில் தமிழர்கள் நாங்களே அம்மண்ணின் பூர்வகுடிகள். வரலாற்றுப் பிற்காலத்தில் குடியேறிய சிங்களர்கள் மண்ணின் பூர்வகுடி மக்களை அழித்தொழித்து, நிலங்களை அபகரித்து வலுக்கட்டாயமாகக் குடியேற்றங்களை ஏற்படுத்திக்கொண்டு இன்று அதைத் தனது நாடு என வல்லாதிக்க முழக்கம் செய்வதை ஏன் எந்த ஒரு உலக நாடும் கேள்வி எழுப்ப மறுக்கிறது என்கின்ற கேள்வி உலகம் முழுக்கப் பரந்து வாழ்கின்ற தமிழனை இளையோர் மனதில் நெருப்பெனக் கனன்று கொண்டிருக்கிறது.

தமிழர்களாகப் பிறந்த ஒரே காரணத்திற்காக நம் இன மக்கள் இலட்சக்கணக்கில் கொத்துக் கொத்தாய் கொலை செய்யப்பட்டபோதுகூட அமைதி கலைக்காத இந்த உலகம் நமக்கென எப்படி நீதி செய்யும் என்கின்ற கேள்வி தமிழர்களாகிய எங்கள் மனதில் எப்போதும் உறுத்திக்கொண்டுதான் இருக்கிறது. இன அழிப்பு முடிந்து 10 ஆண்டுகள் கடந்து விட்டது. ஆனாலும், ஐ.நா. மன்றம் இதை ஒரு விசாரணையாகக்கூட எடுக்க மறுத்து புறந்தள்ளி வருகிறது. ஒரு இனப்படுகொலையைப் போர்க்குற்றம் எனவும், மனித உரிமை மீறல் எனவும், குறுகிய வட்டத்தில் அடைத்து எமது விடுதலைப் பாதையை உலக அரங்கு தடுத்து வருகிறது.‌

எங்கள் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் தமிழீழ சோசலிசக் குடியரசு நாட்டை முழுமையாகக் கட்டியெழுப்பி உலக அங்கீகாரத்திற்காகக் காத்திருந்தார். நமது ஈழப்பெரு நாட்டில் முப்படைகளும் கட்டியெழுப்பப்பட்டு, சட்டத்துறை, காவல்துறை பொதுப்பணித்துறை என அனைத்துக் கட்டமைப்புகளும் நிறுவப்பட்டு முழு விடுதலை நாடாக அறிவிப்பதற்கான தகுதியைப் பெற்றுத் தமிழீழத்தேசம் தயாராக இருந்தது. இதைப் பொறுத்துக்கொள்ள முடியாத சிங்கள இனவாத அரசு உலக நாடுகளுடன் சேர்ந்து எம் தலைவர் கனவுகண்டு எழுப்பிய தேசத்தை இராணுவப் பலத்தைக் கொண்டு அழித்தொழித்தது. இலட்சக்கணக்கில் தமிழர்கள் கொலை செய்யப்பட்டார்கள். பல இலட்சக்கணக்கில் உடல் ஊனம் அடைந்தார்கள். பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் காணாமல் போனார்கள். பல்லாயிரக்கணக்கில் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டார்கள். ஆனால், இதையெல்லாம் மண்மூடி சிங்களப் பேரினவாத அரசு தந்திரமாக மறைத்து வருகிறது. தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற தாயகத் தமிழகம் இடம் பெற்றிருக்கின்ற இந்திய ஒன்றிய அரசு சிங்கள இனவாத அரசுக்குத் துணை போவதுதான் இங்கு வாக்கு செலுத்தி வரி செலுத்தி வாழ்கின்ற தமிழர்களுக்கு மிகப் பெரிய மன வலியைத் தருகிறது.

எதிர்காலத்தில் இந்திய நாட்டின் தவறான வெளியுறவு கொள்கை மாறுவதற்கான அரசியலை தாயகத் தமிழகத்தின் மக்கள் திரள் அரசியல் கொண்டு நிகழ்த்த வேண்டும் என்பதற்காகத்தான் நாம் தமிழர் என ஒவ்வொரு வீதியிலும் இளைஞர்கள் இன்று தாயகத் தமிழகத்தில் திரளத் தொடங்கியிருக்கிறார்கள்.

வரலாற்றில் வீதிகளில் யூதர்கள் எவ்வாறு தொடர்ச்சியாக அழிக்கப்பட்டு, பிறகு மாபெரும் மீளெழுச்சி கொண்டு தொடர்ச்சியாகப் போராடி தங்களுக்கென ஒரு நாட்டினை அடைந்தார்களோ, அதேபோல தமிழர்களாகிய நாமும் வரலாற்றின் பாதையில் ஒரு மீள் எழுச்சி கொள்ளவேண்டிய ஒரு தேசிய இனமாக இருக்கிறோம். உலக அரசியல் ஒழுங்குகள் இன்று மாறிவிட்டன. கடந்த 2009 ற்குப் பிறகு உலக அரசுகளின் அரசியல் போக்குகள் இன்று நிறைய மாற்றம் கண்டிருக்கின்றன. இதையெல்லாம் சரியாகக் கணக்கெடுத்து நமது உத்திகளை வகுத்துக் கொள்ள வேண்டிய காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம். தெற்கு சூடான், கிழக்கு தைமூர், பாலஸ்தீனம் என்றெல்லாம் புதிய நாடுகள் தோன்றிய வரலாறு நம் கண் முன்னால் பாடங்களாக இருக்கின்றன. பெரும் நம்பிக்கையோடு, திட்டமிடலுடன் கூடிய அறிவார்ந்த முறைமையில் ஒன்றிணைந்து செயல்பட்டால் தமிழர்களுக்கென இந்தப் பூமிப்பந்தில் இறையாண்மையுடன் கூடிய ஒரு தேசம் பிறக்கும் என்பது உறுதி.

விடுதலைக் கனவை நோக்கிய நமது பாதையில் நமது மாவீரர் தெய்வங்கள் ஒளிதரும் விளக்குகளாகச் சுடர் விட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் சுவாசித்த மூச்சுக் காற்றைத்தான் அவர்களது உடன்பிறந்தவர்களாகிய நாமும் சுவாசிக்கிறோம் என்கின்ற உணர்வு மீண்டும் எழுவதற்கான மாபெரும் சக்தியினை நமக்கு வழங்குகிறது.

அழித்தொழிக்கப்பட்ட நமது அன்னை நிலமான தமிழீழ நாட்டினை , மாவீரர்கள் எந்தக் கனவிற்காகத் தங்கள் உயிரையும் விலையாக அளித்துப் போராடினார்களோ அந்தக் கனவு தேசத்தைக் கட்டி எழுப்ப வேண்டிய ஒரு மாபெரும் கடமை இன்று உலகத் தமிழின இளையோர் தோள்களுக்கு மாற்றப்பட்டிருக்கிறது.

ஆண்டுகள் பல கடந்தாலும் மாவீரர்களின் தியாகமும் அவர்கள் சிந்தியக் குருதியும் நம் நினைவில் தாயக விடுதலைக் கனவை நினைவூட்டிக்கொண்டே இருக்கும். அந்த மகத்தான கடமையை உணர்ந்து தமிழின இளையோர் தங்களுக்கான அரசியல் பாதையை வகுத்துக் கொண்டு இறையாண்மையுடன் கூடிய தமிழர்களுக்கென ஒரு விடுதலைத்தேசத்தைக் கட்டியெழுப்ப வேண்டுமாய் அனைவரையும் இந்தப் புனித நாளில் அன்போடு அழைக்கின்றேன்.

மாவீரர் சிந்திய குருதி!

ஈழம் மீட்பது உறுதி!

தமிழர்களின் தாகம்! தமிழீழத் தாயகம்!

எம் மொழி காக்க; என் இனம் காக்க; மண் காக்க; என் மானம் காக்க; தன்னுயிர் தந்த மாவீரர்களுக்கு,

வீரவணக்கம்!

  
  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Asiaan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா