Untitled Document
November 7, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
ஆடக் கிடைத்த வாய்பிற்காக, ஆடை கழற்றத் தயார்...??? Top News Top News
[Wednesday 2020-12-23 08:00]

"இதுவும் கடந்து போகும்… எல்லாம் மறந்துபோகும்..." என்ற ஒரு இயலாமை மரபை, தமிழர்கள் தமது நிரந்தர அடையாளங்களில் ஒன்றாகவே வரித்துக்கொண்டிருக்கிறார்களோ ? என்ற கேள்வி அடிக்கடி எழுகிறது.

இடர்கள் பல கடந்தும், இமயம் தொடும் உயரம் தொட்ட தமிழர்கள் நம்மை, எப்படி இயலாமைத் தமிழர்களாக அடையாளப்படுத்த முடியும்..? என்ற ஆதங்கம், கோபம் சிலருக்கு வரலாம். ஆனால், பலருக்கு இக்குற்றச்சாட்டு ஒரு பொருட்டே அல்ல. காரணம், நம்மை இழிவுபடுத்துவோரிடமே, நம்மை முற்போக்காளர்களாகக் காண்பித்து, நல்ல பிள்ளைகளாகப் பெயரெடுக்கும் பழக்கமுள்ள, தன்மானத் தமிழர்கள் பலர் நம் மத்தியில் உண்டு.

"...பொங்குவார் 'புட்டு' இழிவுற்றமை கண்டு... பொங்கார் 'தமிழ்' கொலையுண்ட போதிலும்..." என்பதாக, இலக்கை அடைவதற்கான வழிறைகளை நாடாமல், தமது உணர்ச்சிகளையும், புரட்சிகளையும் வெளிப்படுத்த, இலகுவான செயற்பாட்டு வழிமுறைகளை மட்டும் தெரிவு செய்யும், ஒரு இயலாமைக் கூட்டமாகவே என்னால், நம்மவர்களில் பலரை அடையாளப்படுத்த முடிகிறது.

கடந்த சுமார் 30 ஆண்டுகளில், தனித்தனி சாதனையாளர்களின் எண்ணிக்கை நம்மவர்கள் பட்டியலில் மிகவும் உச்சமானது என்பதை மறுப்பதற்கில்லை.

மூன்று தசாப்தகால, மாபெரும் இனவழிப்புப்போரை எதிர்கோண்டு, உலகம் முழுவதும் சிதறியோடிய ஈழத்தமிழர்கள், அதே சுமார் 30 ஆண்டுகளுக்குள் பொருளீட்டல், புலமை எய்தல், அரசியல் அரியணைகளை அலங்கரித்தல் என்று அவர்களின் தனித்தனியான அடைவுகள் பிரமிப்பூட்டும் வகையில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இவ்வாறான தனித்தனி அடைவுகளே, தமிழர்களுக்கான ஒரு கௌரவமான அடையாளத்தையும், சாதனைத் தமிழர்கள் என்ற அங்கீகாரத்தையும், தமிழர்கள் புலம்பெயர்ந்துவாழும் நாடுகளில் அவர்களுக்குக் கொடுத்துள்ளன.

ஒரு தலைமுறைக்காலத்தில், அதிலும் குறிப்பாக சமதலைமுறைக்காலத்தில், தமிழர்களின் அடைவு என்பது அசாத்தியமான சாத்தியமே.

அதன் காரணமாகவே, இவ்வாறான பல உதிரிகளின் அடைவுகளை, வெளியில் இருந்து நோக்கும் பிற இனத்தவர்கள், தமிழர்களை அதிசய மனிதர்களாக அடையாளப்படுத்துகிறார்கள்.

ஆனால், அவ்வாறான பெருமைகளைத் தமிழர்கள் கூட்டாகச் சுமக்க முடியுமா..? சாதனைத் தமிழர்கள், அதிசய மனிதர்கள் என்ற போற்றுதல்களை ஒரு பொது அடையாளமாகக் கொள்ள முடியுமா..? இதற்கான பதிலை, தன்மானத் தமிழர்கள்தான் நன்கு அறிவார்கள். "...பாம்பின் கால் பாம்பு அறியும்.." என்பதுபோல, தமிழர்களின் இயலுமைகள் மற்றும் இயலாமைகள் குறித்து நாமே நன்கு அறிவோம்.

…..காடு பச்சை என்பது பொது அடையாளமே… ஆனால், காட்டுக்குள் நிறையவே பட்ட மரங்களும், சொத்தை மரங்களும், வனாந்தரத் தரைகளும் பரந்து கிடந்தால், அதனையொரு பசுங்காடாக அடையாயப்படுத்த முடியாது. ஆங்காங்கே நிலத்தடி நீரை உறிஞ்சிக்குடித்துவிட்டு, நிமிர்ந்து நிற்கும் சில நெடு மரங்கள் மட்டும், காட்டின் அடையாளம் நாமே என்று மார்தட்டிக்கொள்ள முடியாது....

அவ்வாறுதான், 'நான்' என்ற அடையாளம்… 'நாம்' என்ற அடையாளமாக மாற்றம் அடையும் வரையில், தமிழர்கள், தமது செயல்களையும், சிந்தனைகளையும் செப்பனிடவேண்டியது வரலாற்றுக் கடமை.

ஒரு புறம் தனித்தனி அடைவுகளுக்கான பாய்ச்சல்கள் அவசியம் என்றபோதிலும், நமது அடையாளங்கள் அழிக்கப்படாமல் தடுத்தாடுவதும், அழிவுகளுக்குத் துணைபோகாமல் எதிர்த்தாடுவதும், தமிழ்ப்பால் குடித்தவர்களுக்கு இருக்க வேண்டிய பாரிய பொறுப்பு.

ஆனால், அந்த சுயம்காப்பு அறப்போரை தனித்தனி மனிதர்களாக நின்று நடத்திவிட முடியாது. அது ஒரு கூட்டு வலியின் கூட்டு மொழியாகவே வெளிப்படவேண்டும்.

நுண்ணறிவும், நுண்திறனும் சின்ன எறும்புக்கு இருந்தபோதிலும், தனது கூட்டுறவின் மூலமே, ஒழுங்கு விதியை இவ்வுலகிற்கு அது போதிக்கிறது. ஐக்கியமே அதனது மகாசக்தி ! ஒற்றுமையே அதனது போராயுதம் !

இவ்வாறான பின்புலத்தில் தான், தமிழர்கள் தமது அடையாளச் சிதைப்பையும், வரலாற்றுத் திரிபையும், மொழியின் அவமதிப்பையும், எவ்வாறு எதிர்கொள்ளப்போகிறார்கள் ? என்ற விடை தெரியாக் கேள்வி தொக்கி நிற்கிறது. தமிழர்கள் தமது இருப்பைக்காக்கும் பொறுப்பை எப்பொழுது கூட்டாகச் சுமக்கப்போகிறார்கள்..?

தமது சுய இலாபங்களுக்காகவும், சுய அடையாளங்களுக்காகவும், அவ்வப்பொழுது தோன்றி மறையும் பொறுப்பற்ற பொறிகளுக்குள், நமது பொறுப்புக்களைப் புதைத்துவிடப்போகிறோமா..? ....குஞ்சைத் தூக்கிச்செல்ல, காற்றைக் கிழித்து வருகின்ற பருந்திடமிருந்து, தன் குஞ்சுகளைக் காக்க, தாய்க்கோழி விரைந்து பறந்து விரட்டுவதும், தன் சிறகுகளுக்குள் குஞ்சுகளை போர்த்திக் கொள்வதும், எவ்வளவு அறப்புதமான உணர்வும், விரைந்த வினையாற்றலும் என்பதை நமக்குப் புரியவைக்கிறது... இந்நிலையில் தான், தமிழர்களுடைய, தமிழ் செயற்பாட்டாளர்களுடைய, தமிழ் அமைப்புக்களுடைய, தமிழ்ப் பற்றாளர்களுடைய அசமந்தப்போக்குத் தொடர்பான விவாதம் அவசியம் என்று தோன்றுகிறது.

தமிழர்களுடைய மொழிச் செழுமையை அசிங்கப்படுத்தி, தமிழர்களுடை வரலாற்றைத் திரிபுபடுத்தி, தமிழ் தற்பாலினத்தவர்களை மலினப்படுத்தி, தமிழர்களுடைய அடையாளத்தை மாற்றியமைத்து, ஒரு தமிழ் திரைப்பட அடையாளத்துடன் ஒஸ்காருக்குள் (OSCASRS) நுழைந்து, சர்வதேச அங்கீகாரம் பெறமுனைந்த 'FUNNY BOY' தொடர்பில், எத்தனை தமிழர்கள் தமது குரல்களைப் வெளிப்படுத்தியிருகிறார்கள் அல்லது பதிவுசெய்திருக்கிறார்கள் என்ற கேள்வியை ஈழத்தமிழர்களும், உலகத்தமிழர்களும் கேட்டாகவேண்டும்.

கனடாவில் வசிக்கும், இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட ஷியாம் செல்வத்துரையின் (Shyam SELVADURAI) நாவலைத் தழுவி, இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட, கனேடிய திரைப்ப இயக்குனர் தீபா மேத்தாவின் (Deepa MEHTA) இயக்கத்தில், கனடாவில் வெளிவந்துள்ள தமிழ் - சிங்களம் - ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளை உள்ளடக்கிய திரைப்படமே 'FUNNY BOY'.

ஷியாம் செல்வத்துரையும், தீபா மேத்தாவும் இணைந்து திரைக்கதை - வசனங்களை எழுதியுள்ள இத்திரைப்படம், தற்போது, கனடாவில் CBS GEM தளம் ஊடாகவும் மற்றும் பிறநாடுகளில் NETFLIX தளம் ஊடாகவும் வெளியிடப்பட்டுள்ளது. 1974 ஆம் ஆண்டுக்கும், 1983 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தைச் சுட்டி நிற்கும் இத்திரைப்படத்தில், தமிழ் தற்பாலின இளைஞன், தனது சிறு பராயம் முதல், வாலிபப்பருவம் வரையில் எதிர்கொண்ட இடர்கள் மற்றும் அவமானங்கள் குறித்தும், உள்நாட்டு யுத்த சூழ்நிலைகளால், குறித்த இளைஞன் எதிர்கொள்ளும் பாதிப்புக்கள் குறித்தும், அத்திரைப்படம் சித்தரிக்க முனைகிறது. ஈற்றில், அவன் எதிர்கொண்ட அவமானங்கள் மற்றும் அநீதிகளுக்கான தீர்வாக, அவனது கனடா வருகை சித்தரிக்கப்படுகிறது.

இத்திரைப்படம் உத்தியோபூர்வமாக வெளியாகி சுமார் 2 வாரங்கள் கடந்துவிட்டபோதிலும், அது தொடர்பான விவாதங்களும், எதிர் விசர்சனங்களும், கடந்த சில மாதங்களுக்கு முன்னமே, சில தமிழ் புலமைசார் மற்றும் செயற்பாட்டுத் தளங்களின் பேசுபொருளாக மட்டும் அமைந்தன.

இந்நிலையில்த்தான், இத்திரைப்படத்தின் தமிழ் மொழிப் பிரயோகம் தொடர்பில் முன்வைக்கப்பட்ட விமர்சனங்களை அடுத்து, தமிழில் பேசப்படும் காட்சிகளில் மீள் குரற்பதிவுகள் (DUBBINGS) இடம்பெற்று, திரைப்படம் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

எனினும், திரைப்படத்தின் அடிப்படைத் தவறுகள் குறித்தும், திருத்தப்பட்டதாகக் கூறப்படும் குரல்பதிவுகளில், ஒரு பாத்திரத்துக்கான பேச்சுமொழியைத் தவிர, ஏனைய அனைத்துத் தமிழ்ப் பாத்திரங்களின் பேச்சு வழக்கிலும், தமிழ்மொழிப் பிரயோகம் சிதைக்கப்பட்டுள்ளமை தொடர்பில், புலம்பெயர் தளங்களில் உள்ள, ஒரு சில இளம் தலைமுறைத் தமிழ்ப்பற்றாளர்களே தமது ஆதங்கத்தையும், கண்டனத்தையும் முன்வைத்தனர்.

மேலும், குறிப்பாக தமிழ் தற்பாலினத்தவர்கள் தரப்பில் இருந்து, தமது அடையாளம் மற்றும் தமிழின அடையாளம் என்பன மலினப்படுத்தப்பட்டமை தொடர்பில் குற்றச்சாட்டையும், கண்டனத்தையும் முன்வைத்ததோடு, திரைப்படத்தில் இழைக்கப்பட்ட தவறுகளுக்காக, நீதி வேண்டும் எனவும், தமது கோரிக்கை மனுவை முன்வைத்தனர். அதன் பின்னரே, இவ்விடயம் ஒரு பொதுத்தளத்தின் பேசுபொருளாகக் கவனத்தை ஈர்த்தது. எனினும், அது போதுமான கவனத்தையும், கரிசனையையும் சமூக மட்டத்தில் ஏற்படுத்தத் தவறிவிட்டது.

குறிப்பாக, 'தமிழ் மொழி', 'தமிழ் இனம்', 'தமிழ் வரலாறு' என்று சத்தமிட்ட ஒரு பெருங்கூட்டம் சத்தமில்லாமல் அடங்கிப்போனமை அம்பலமானது. ஊடகங்களால் நடத்தப்பட்ட நிகழ்ச்சிகள் தவிர, மக்களின் கவனத்தை அதிகம் ஈர்க்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவில்லை.

எனினும், ஒரு சில தமிழ்மொழி ஆர்வலர்களும், செயற்பாட்டாளர்களுமே, இத்திரைப்படத்தின் மீதான எதிர்ப்பு மைய்யத்தை உயிர்ப்போடு வைத்திருக்க முனைந்தார்கள். ஆனால், அதற்கான ஒத்துழைப்பை, சமூகமாகவோ ? அல்லது அமைப்புக்களாகவோ..? தமிழர் தரப்பு கூட்டாக வெளிப்படுத்தவில்லை என்பதே கசப்பான உண்மை. 'புட்டு'க்காக புரட்சி செய்த தமிழர்கள், தம் கண்முன்னால் ஒரு வரலாற்றுத்தவறு அரங்கேறிக்கொண்டிருக்கிறது என்ற பாரிய, உண்மையைப் புரிந்துகொள்ளவில்லை அல்லது புரிந்துகொள்ள விரும்பவில்லை.

இவ்வாறான பலவீனமே… கட்டமைக்கப்பட்ட இனவழிப்புவாதிகளுக்கு, தமிழர்கள் கொடுக்கின்ற ஆகச்சிறந்த பரிசாக இருக்க முடியும். இத்திரைப்படம் ஏன் ? எதிர்க்கப்படுகறது என்ற புரிதல் கூட, நம்மத்தியில் பலருக்கு இல்லை. BIG BOSS விடுப்பு நிகழ்ச்சி பார்த்து ஆதங்கப்படுவதும், சின்னத்திரை நாடகங்களைப் பார்த்து கண்ணீர் விடுவதுமாக இருக்கும் பலருக்கு 'FUNNY BOY' யின் ஆபத்துப் புரியவில்லை.

'FUNNY BOY' ஏன் எதிர்க்கப்படுகிறது…?

▪️தமிழர்களின் 'தோற்றம்', 'நிறம்', 'இயல்பு'களைக் கொண்டிராத, தமிழர்கள் அல்லாதோரும், தமிழர்களை இனவழிப்புச் செய்த தரப்பைச் சேர்ந்த சிங்களவர்களும், தமிழர்களின் பாத்திரத்தில் நடிக்கவைக்கப்பட்டமை.

▪️இலங்கையிலும், புலம்பெயர் நாடுகளிலும், தமிழகத்திலும், தமிழ்ப் பாத்திரங்களில் நடிப்பதற்குரிய நடிகர்களைத் தேர்வு செய்யமுடியவில்லை என்ற காரணங்களை உருவாக்கி அதனை நியாயப்படுத்தியமை.

▪️முதலில் தமிழர்கள்தான், சிங்களவர்களைத் (சிறுவர்கள், பெண்கள் உட்பட) தாக்கிக் கொன்றார்கள் என்றும், அதுவே 1983 யூலைத் தமிழினப்படுகாலைகள் இடம்பெறக்காரணமாக அமைந்ததாகவும் காட்சிகள் ஊடாகச் சித்தரிக்க முனைந்தமை.

▪️வரலாற்று முரணாக, வடக்கு-கிழக்கு எல்லைக்கிராமங்களில், தமிழர்களின் போராட்ட அமைப்பான விடுதலைப்புலிகள், சிங்களவர்களைக் கொலைசெய்கிறார்கள் என்று தமிழிலும், தென்னிலங்கையில் சிங்களவர்களைக் கொலை செய்கிறார்கள் என்று ஆங்கில மொழிபெயர்ப்பிலும் சித்தரித்தமை.

▪️முழுக்க முழுக்க அரசினதும், காவல்துறை மற்றும் ஆயுதப்படைகளினதும், ஆசீர்வாத்துடனும், அனுசரணையுடனும், நெறிப்படுத்தப்பட்ட யூலைத் தமிழினப்படுகொலைகைளை, சில சிங்கள இனவெறியர்களால் மட்டும் நடத்தப்பட்டதாகவும், அரசும், ஏனைய சிங்களவர்களும் தமிழர்களைக் காப்பாற்ற மட்டும் முனைந்தார்கள் என்ற தோற்றப்பாட்டையும் காண்பிக்க முனைந்தமை.

▪️ஏனைய சிங்களக் கைதிகளால், சிறைக்கூடங்களில் வைத்தே, திட்டமிட்ட முறையில், தமிழ்க் கைதிகள் வெட்டிக்கொலை செய்யப்பட்டு, கண்கள் பிதுக்கி எடுக்கப்பட்டபோது துணைநின்ற சிங்களக் காவல்துறை, தமிழ்ப் பெண் ஒருவர் தாக்கப்பட்டபொழுது, அவரைக் காப்பாற்றி, தமது காவல்துறை வாகனத்தில் வீடுவரை அழைத்து வந்து குடும்பத்திடம் ஒப்படைப்பதாகக் காண்பிக்கும் காட்சி, தமிழர்களை ஓட ஓட வெட்டியும், எரித்தும் கொன்ற சிங்களக் காடையர்களுக்கு காவல்நின்ற காவல்துறையை, தர்மத்தின் காவலர்களாக சித்தரிக்கும் ஒரு முயற்சி.

▪️ஜனநாயக மறுப்பும், சட்ட ஒழுங்கு மறுப்பும், தமிழர்களுக்கு எதிரான ஆயுதங்களாகப் பயன்படுத்தப்பட்டு, அவர்கள் வேட்டையாடப்பட்ட காலத்தில், பயங்கரவாத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஒரு தமிழ் இளைஞரை, அவரது குடும்ப உறுப்பினர் சென்று சந்திப்பதற்கு, ஜனநாயக அடிப்படையிலும், கருணை அடிப்படையிலும் காவல்துறை அனுமதியளித்ததாகக் காண்பிக்க முனைவது, சட்ட-ஒழுங்கும், ஜனநாயகமும் காட்சி இடம்பெற்ற காலத்தில் பேணப்பட்டதாகக் காண்பிக்க முனைந்தமை.

▪️தனது மகளை ஒரு சிங்கள இளைஞன் காதலிக்கிறான் என்று அறிந்ததும், சிங்கள இளைஞரின் வீட்க்குச் சென்று அவனது பெற்றோரைத் திட்டித் தீர்க்கும் தாயாரிடம், தேனீர் அருந்துகிறீர்களா…? பிஸ்கிட் சாப்பிடுகிறீர்களா..? எனக்கேட்டு சமாதானம் செய்ய முற்படும் சிங்களத் தாயின் பாத்திரப்படைப்பு, தமிழர்களை வன்முறையாளர்களாகவும், சிங்களவர்களை அகிம்சைவாதிகளாகவும் காண்பிக்கும் ஒரு வலிந்த திணிப்பு.

▪️83 யூலைப்படுகொலைகள் அரசால் நெறிப்படுத்தப்பட்ட நிலையில், அது சார்ந்த திரைப்படம் ஒன்றின் படப்பிடிப்பை இலங்கையில் மேற்கொள்வதற்கு எவ்வாறு இலங்கை அரசு அனுமதியளித்தது என்ற தமிழர்களின் ஆதங்கம்..?

▪️சமபால் உறவு, இலங்கையில் தண்டனைக்குரிய குற்றமாகவும், சமூகத்தால் அங்கீகரிக்கப்படாத நிலையிலும், எவ்வாறு இலங்கையில் அவ்வாறான ஒரு மைய்யக்கருவைக் கொண்ட திரைப்படத்தை எடுப்பதற்கு, இலங்கை அரசு அனுமதயளித்தது என்ற இயல்பான சந்தேகம்.

▪️எனவே, யூலைப்படுகொலைகள், மற்றும் தற்பாலின விவகாரம் சார்ந்த கதைக்கருவின் படப்பிடிப்பை இலங்கையில் செய்வதற்காக, தமிழர்களின் அடையாளச்சிதைப்பு மற்றும் வரலாற்றுத் திரிபு என்ற சமரசங்களைத் திரைப்படக் குழு செய்துகொண்டதா என்ற நியாயமான கேள்வி..?

மேற்குறிப்பிட்ட காரணிகளே… 'FUNNY BOY' திரைப்படம் எதிர்க்கப்படுவதற்கான பிரதான காரணிகளாக விளங்குகின்றன. யார் பொறுப்பு...?

'FUNNY BOY' தொடர்பான தரவுகளின் தவறுகளுக்கும், அடையாளச் சிதைப்பிற்கும், வரலாற்றுத் திரிபுகளுக்கும், விருதுகளுக்காகப் படமெடுக்கும் தமிழரல்லாத 'தீபா மேத்தா' என்ற இயக்குனரே முழுப்பொறுப்பாளி என்று கூறிவிட்டோ..? அல்லது தனது தாய்மொழி தமிழ் அல்லவெனவும், தான் ஒரு இலங்கையன் (SRI LANKAN) எனவும், மொழிகடந்து தன்னை அடையாளப்படுத்த விரும்புகின்ற 'ஷியாம் செல்வத்துரை' என்ற எழுத்தாளரின் புனைவில் உருவான ஒரு சினிமாப் படைப்புத்தானே என்று கூறிவிட்டோ..? தமிழர்கள் நகர்ந்து செல்ல முற்பட்டால், இனிவரப்போகின்ற திரிபுகளுக்கும், தவறுகளுக்கும் இதுவே தொடக்கமாக அமையும்.

இனிவரும் காலங்களில், யூலைப்படுகொலைகள் போன்றோ.. அல்லது முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலைகள் போன்றோ.. வெளிப்படையான மனிதக் கொலைகள் இடம்பெறுவதைக் காட்டிலும், இதுவரை இடம்பெற்ற படுகொலைகளுக்கான நியாயப்படுத்தல்களும், வெள்ளையடித்தல்களுமே, அதிகம் அரங்கேறும்.

அதற்கு 'தீபா மேத்தா' மற்றும் 'ஷியாம் செல்வதுரை' போன்ற சர்வதேச அங்கீகாரம் பெற்ற படைப்பாளிகளும், புலமையாளர்களுமே அதிகம் பயன்படுத்தப்படுவார்கள். இவ்வாறான படைப்புக்கள் மூலமே, தமிழர்களுக்கு இழைக்கப்பட்டது அநீதியல்ல, அதுவொரு சமன்-எதிர் விளைவு (Collateral Damage) என்பதாகச் சித்தரிக்கவே, இதுபோன்ற புனைவுகள் ஊடாக இனவாத அரசுகள் சர்வதேச அரங்கில் விதைக்க முனையும். அவ்வாறான படைப்புக்களுக்கு 'ஒஸ்கார்' (OSCARS) போன்ற சர்வதேச விருதுகளும் கிடைத்துவிட்டால், அதுவே நம்பகத்தன்மையுடைய ஒரு வரலாறாகவும் பதியப்படும் அபாயமுண்டு.

எனவே தான், இவ்வாறான சதிக்கோட்பாட்டு (Conspiracy Theory) நகர்வுகள் மூலம், தமிழர்களின் தலைவிதியைக் கைய்யாழும், எதிராளிகளின் மூலோபாயங்களை முளையிலேயே கிள்ளிவிட, தமிழர் தரப்பு கூட்டாக முனைந்திருக்கவேண்டும். மறுபுறத்தில், இவ்வாறான மூலோபாய நகர்வுகளுக்கு, தமிழர் தரப்பில் உள்ள, புலமையாளர்கள், புத்திஜீவிகள், முற்போக்குவாதிகள் என்று தம்மை அடையாளப்படுத்துவோரையே, சம்பந்தப்பட்ட தரப்புக்கள் கருவிகளாகப் பயன்படுத்தும். அவர்கள் மூலமாகவே, சமூகத்தில் ஒரு ஒப்புதலைப் (Endorsement) பெறுவதற்கான கருத்தியல் விதைப்புக்களையும், மிகவும் நுட்பமாக முன்னெடுக்க முனையும்.

இவ்வாறான தந்திரங்களின் அடிப்படையிலேயே, 'FUNNY BOY' திரைப்பட விவகாரம் கைய்யாளப்பட்டுள்ளது. தமிழர்கள் சிலர், ஆலோசகர்களாகவும், மேற்பார்வையாளர்களாகவும், உதவியாளர்களாகவும் உள்வாங்கப்பட்டு, 'FUNNY BOY' திரைப்படம், ஒரு சிறப்பான படைப்பு எனவும், சர்வதேச அரங்கிற்கு, ஒரு சொல்லப்படாத செய்தி, துணிச்சலாகச் சொல்லப்பட்டிருப்பதாகவும் முன் அங்கீகாரம் பெறமுற்பட்டுள்ளனர்.

இத்தமிழர்களே, மொழிப்பிரயோகம் FANSTASTIC எனவும், வரலாறு SUPER என்றும், நற்சான்றிதழ் கொடுத்துள்ளனர். ஏன் ? தீபா மேத்தாவிற்கும், மேலாகச் சென்று அத்திரைபடத்தை நியாயப்படுத்த முனைந்துள்ளனர்.

மேலும், சிலர் தமக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்கும் என்பதற்காக, தமது அடையாளத்தையும், உணர்வுகளையும் சுயநல நோக்கில் அடகுவைத்து விலைபோயுள்ளனர்.

மேலும் சிலர், தமது புலியெதிர்ப்பு நிலைப்பாட்டை, தமது தமிழின எதிர்ப்பாக மடைமாற்றி, தமது நெடுநாள் குரோதத்தை தீர்க்கமுற்பட்டுள்ளனர்.

இவர்கள் '....தமக்கு மூக்குப் போனாலும், எதிரிக்குச் சகுனம் பிழைக்கவேண்டும்...' என்ற அளவுக்கு, மதம்கொண்ட புலியெதிர்பாளர்களாக 'FUNNY BOY' கான ஆதரவின் மூலம் தம்மை வெளிக்காட்டியுள்ளனர்.

கொஞ்சம் பச்சையாகச் சொன்னால், '....ஆடக் கிடைத்த வாய்பிற்காக, ஆடை கழற்றத் தயங்காதவர்கள்....' இவர்களே. குறிப்பாக, 'தமிழ் இருக்கை' மூலம், தமிழை அரியாசனம் ஏற்றுவோம் என்று தமிழ் மக்களிடம் நிதிசேர்க்கும் ஒரு தமிழ் அமைப்பும், அதனது தமிழின எதிர்ப்பு சகபாடிகளும், இலங்கைத் தூதரக அதிகாரிகள் இருவர் சகிதம், திரைப்படத்தின் சிறப்புக் காட்சியைப் பார்வையிட்டுப் பாராட்டியதோடு, அதனை சமூகத்தில் சந்தைப்படுத்தும் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டு தலையால் நடந்துகொண்டிருக்கிறார்கள்.

ஒருபுறம் துணைபோனவர்களும், அதனை தமது சுயநலங்களுக்காக அங்கீகரித்தவர்ளும் போக, இவற்றையெல்லாம் கண்டும் காணாமலும், ஒரு பெரும் கூட்டம் அமைதியாக இருப்பது, வேதனைக்குரியதும் விசித்திரமானதுமாகும். போட்டிக்கு விருது கொடுத்தல், ஏட்டிக்குபோட்டியாக அஞ்சலி நிகழ்வுகளை நடத்தல் என்று, நுனிநாக்கில் 'தமிழ்த் தேசியம்' பேசித்திரியும் மாற்று அமைப்புக்கள் பலவும், இவ்விடயத்தில் மௌனமாக இருந்து அங்கீகரித்திருக்கிறார்களோ? என்றே எண்ணத் தோன்றுகிறது.

'முள்ளிவாய்க்கால்' நினைவுக்கும், 'மாவீரர்' நினைவுக்கும், நடன நிகழ்ச்சிகளை நடத்தி, தமது செல்வாக்கைக் காட்டுவதே, இவ்வமைப்புக்களின் அகராதியில், அதியுச்சமான அரசியல் எழுச்சியும், உணர்வு வெளிப்பாடுமா என்ற எண்ணம் மானத்தமிழர்களுக்கு வராமற்போனதேனோ.?

மேலும், ஊருக்கொரு 'சங்கம்', பாடசாலைக்கு ஒரு 'அமைப்பு' என்று தங்களை அமைப்புக்களால் அடையாளப்படுத்த முனையும், ஊர்ப்பிரமுக சிங்கங்களும், 'தமிழ்' அசிங்கப்படுவதைப்பற்றி வாய்திறக்க முன்வரவில்லை.

தமிழ் எங்கள் 'மூச்சு', தமிழே எங்கள் 'அடையாளம்' என்று, மேடைகளில் முழங்கிப் பொன்னடைகள் வாங்கியவர்கள் பலரும், இவ்விடயத்தில் பதுங்கியதேனோ..?

ஒருவேளை, இவர்களின் மொழிப்பற்றும், தேசப்பற்றும் தமது விளம்பரங்களுக்கானவை மட்டுமே என்று மறைமுகமாகச் சொல்கிறார்களோ..?

கனடாவில் உள்ளுராட்சித் தேர்தலில் கூட, 'தமிழருக்கு உரிமை', 'தமிழருக்கு நீதி', 'தமிழ்த் தேசியமே' எங்கள் அடையாளம் என்று, வாக்குவேட்டையில் இறங்கிய 30 இற்கும் மேற்பட்ட தமிழ்ப் பற்றாளர்கள், இப்போது எங்கே தொலைந்து போனார்கள்..?

எனவே, 'தீபா மேத்தா'வை நோக்கி ஒரு விரல் சுட்டப்படுகிறபோது, மிகுதி நான்கு விரல்களும் நம்மையே சுட்டுகின்றன என்பதையே இக்கட்டுரை சுட்டிக்காட்ட விளைகிறது.

இந்நிலையில், 'FUNNY BOY' ஒஸ்காரில், பிறமொழியில், அங்கீகாரம் பெறுகிறதா? அல்லது வேறு பிரிவுகளில் அங்கீகாரம் பெறுகிறதா ? என்பதற்கு அப்பால், 'தீபா மேத்தா' போன்றவர்கள் இனிவரும் காலங்களில் தமிழர்களை தமது கருவிகளாகப் பயன்படுத்துவதை நிரந்தரமாக நிறுத்துவதற்கும், அதற்காக, நம்பவர்களையே முகவர்களாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்குமான ஒரு கூட்டுக்குரல் ஒலிக்கவில்லையெனில், தவறுகள் மீளவும் நடக்கும். எனவே, தவறுகளுக்கான தீர்வாக, 'தீபா மேத்தா'விடமும், சம்பந்தப்பட்டவர்களிடமும், பொருப்புக்கூறலுடனான மன்னிப்புக்கோரல் தமிழர் தரப்பால், கூட்டாக வலியுறுத்தப்படவேண்டும்.

'FUNNY BOY' திரைப்படம் தவறான வழிநடத்தலில், தமிழர்களின் மனங்களைக் காயப்படுத்தி, வரலாற்றைத் திரிபுபடுத்திவிட்டது என்பதை, 'தீபா மேத்தா' பகிரங்க வெளியில் ஒப்புக்கொண்டு, தமிழர்களிடம் மன்னிப்புக்கோரவேண்டும்.

அவ்வாறான மன்னிப்புக்கோரல் 'FUNNY BOY' யை சந்தைப்டுத்துகின்ற, அத்தனை மைய்ய ஊடகங்களின் செய்திகளிலும், படைப்புகளிலும் உள்ளடக்கப்படவேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி, தமிழர்களும், செயற்பாட்டாளர்களும், அவர்களின் அமைப்புக்களும், உடனடியாகவே தமது கண்டங்களையும், அதிருப்திகளையும் பதிவு செய்யவேண்டும்.

இதுவே, கட்டமைக்கப்பட்ட இனவழிப்புப் பொறிமுறைக்கு, தமிழர்கள் கொடுக்கும் முதலடியாக இருக்கவேண்டும். 'புட்டு'க்காக தலைமையின்றிக் குரல் கொடுத்த தன்மானத் தமிழர்கள், இவ்விடயத்தில் 'உணர்வுத் தோழமை'யுடன் குரல் கொடுக்க முன்வர வேண்டும்.

இல்லையேல், தீபா மேத்தாவை விட, நீங்களே குற்றவாளிகள். 'வரலாறு' தவறாகப் பதியப்படுவதை அனுமதித்தாலும், அதுவும் ஒரு வரலாற்றுத் தவறே..!!!

  
  
   Bookmark and Share Seithy.com


Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா