Untitled Document
November 8, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
தமிழ்க் கல்விக் கழகத்தின் 32 ஆவது அகவை விழா-2022: யேர்மனி மத்தியமாநிலம்! Top News
[Wednesday 2022-04-13 07:00]

தாயகனின் சிந்தனைக்குச் செயல்வடிவம் கொடுத்ததன் விளைவாக மொழியோடு கலை, பண்பாடு, விளையாட்டு எனப் பன்மைப் பரிமாணங்களினூடாகத் தமிழ்ச் சிறார்களை அணியப்படுத்தி ஆற்றலுடையோராய் வளர்த்தெடுப்பதை நோக்காகக் கொண்டியங்கும் தமிழ்க் கல்விக் கழகம் 32ஆவது அகவை நிறைவு விழாவைச் சிறப்போடு தொடங்கியுள்ளது. இவ்வாண்டும் ஐந்து அரங்குகளில் நடாத்துவதற்குத் திட்டமிட்டவாறு முதலாவது அரங்கம் 09.04.2022 சனிக்கிழமை மத்திய மாநிலத்தின் வெஸ்லிங் (Wesseling) நகரிலே நிறைவுற்றுள்ளது.

தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் யேர்மன் கிளைப் பொறுப்பாளர் திரு. யோன்பிள்ளை சிறீரவீந்திரநாதன் வெஸ்லிங் நகரத் துணைமுதல்வர் மொனிக்கா எங்கெல்ஸ் வேல்றெர், யேர்மன் தமிழ்ப் பெண்கள் அமைப்பின் பொறுப்பாளர் திருமதி வசந்தி மனோகரன், யேர்மன் தமிழ் இளையோர் அமைப்பின் பொறுப்பாளர் செல்வி அஞ்சனா பகீதரன், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் மத்திய மாநிலப் பொறுப்பாளர்களான திரு. சின்னையா நாகேஸ்வரன், திரு. கணபதி சிவசுப்பிரமணியம் ஆகிய சிறப்பு விருந்தினர்களோடு, தமிழ்க் கல்விக் கழகத்தின் தேர்வுப்பிரிவுப் பொறுப்பாளர் செல்வன் சேரன் யோகேந்திரன் மற்றும் தமிழ்க் கல்விக் கழகத்தின் ஆண்டுச் செயற்றிறன் தொகுப்பான வெளிச்சவீடு இதழின் பொறுப்பாளர் திரு. தர்மலிங்கம் தீபன் ஆகியோரும் இணைந்து மங்கல விளக்கேற்றியதைத் தொடர்ந்து அகவணக்கத்தோடு அரங்க நிகழ்வுகள் தொடங்கின. தமிழ்க் கல்விக் கழகத்தின் நோக்கமும் இளையோரின் பங்கேற்பும் ஒன்றாகக் கலந்து நின்ற காட்சியாகத் தமிழ்க் கல்விக் கழகப் பொறுப்பாளர் திரு. செல்லையா லோகானந்தம் அவர்களின் வரவேற்புரை அமைய, விழாவை இளையோர்கள் நடாத்தியமை சிறப்பாகும்.

தேர்வு மதிப்பளிப்பு, தமிழ்த்திறன் மதிப்பளிப்பு என ஆற்றல் வளங்களின் அறுவடையாக அமைய, அந்த ஆற்றல்களை அணியமாக்கும் ஆசான்களின் பணியைப் போற்றும் வகையில் 5,10,15 ஆண்டுகள் பணிநிறைவிற்கான மதிப்பளிப்பும் 20ஆண்டுகள் பணிநிறைவிற்காக ‘தமிழ் வாரிதி’ மற்றும் 25 ஆண்டுகள் பணிநிறைவிற்காக ‘தமிழ் மாணி’ எனப் பட்டமளிப்புமாக அரங்கம் அணிசெய்தமை சிறப்பு. பட்டமளிப்புகளைச் சுட்டுவதாயின் பலபக்கங்கள் எழுதலாம். அவை ஒவ்வொன்றும் விழாவுக்குள் விழாவாக நகர்ந்தமை பாராட்டிற்குரியது.

விழாவின் மகுடமாக முப்பது ஆண்டுகள் தமிழ்ப் பணியாற்றியமைக்கான மதிப்பளிப்பு அமைந்தது. அந்த மதிப்பேற்பைச் சோலிங்கன் தமிழாலய நிர்வாகி திரு. நமசிவாயம் தர்மராஜா, சோலிங்கன் தமிழாலய ஆசிரியரும் முன்னாட் தேர்வுப்பிரிவுப் பொறுப்பாளருமான திருமதி தேவிமனோகரி தெய்வேந்திரம் மற்றும் மத்திய மாநிலச் செயற்பாட்டாளர்களில் ஒருவரான திரு. செல்லர் தெய்வேந்திரம் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். விழாவுக்குள் விழாவாகப் பவளவிழாவைத் தமிழ்க் கல்விக் கழகம் தன்னோடு இணைந்து பயணிக்கும் மூத்தோருக்கு மதிப்பளிக்கும் வகையிற் செயலாக்கியுள்ளது. அந்தவகையிலே வெஸ்லிங் அரங்கில் வூப்பெற்றால் தமிழாலய ஆசான் ‘தமிழ் மாணி’ றோமாலியஸ் ஸ்ரீபன் அவர்களைத் தமிழாலயக் குடும்பம் புடைசூழ அரங்கம் அழைத்துவர, தமிழ்க் கல்விக் கழகத்தால் வாழ்த்துப் பாவுடனான பட்டயம் வழங்கி மதிப்பளிக்கப்பட்டதோடு, நிர்வாகி மற்றும் ஆசிரியர்களது வாழ்த்துரைகளும் இடம்பெற்றன. வேற்றுமொழிச் சூழலுள் தமிழோடு பயணிக்கும் தமிழ்ப் பெற்றோரது அயராத முயற்சியும் ஆசான்களின் ஒருங்கிணைந்த முயற்சியின் பயனாக ஆண்டு 12வரை தமிழாலயங்களில் கற்றலை நிறைவுசெய்தோருக்கான மதிப்பளிப்பு தமிழ்க் கல்விக் கழகத்தின் மற்றொரு பரிமாணமாய்த் துலங்கியது. இந்த மாணவர்களை நோக்கி, எம் தேசத்திற்காக என்ன செய்யப் போகின்றோம்? என்று தமிழ் இளையோர் அமைப்பின் பொறுப்பாளர் தனது உரையிலே வினவியமையையும் அவதானிக்க முடிந்தது.

அகவை நிறைவு விழாவின் முத்தாரமாய் தமிழாலயக் குடும்பம் ஒன்றுகூடி முயற்சியும் பயிற்சியுமாக ஒன்றிணைந்து உழைத்ததன் அறுவடையாகத் தமிழ்த்திறன், தேர்வு, கலைத்திறன் எனத் தமிழாலயங்கள் தமதாக்கிய வெற்றிக்கனிகளின் பயனாகச் சிறப்பு மதிப்பளிப்புகள் வழங்கப்பட்டன. மாநில மட்டத்தில் நடைபெற்ற கலைத்திறன் போட்டியில் முறையே முதல் மூன்று நிலைகளைத் தமிழாலயம் முன்சன்கிளட்பாக், தமிழாலயம் நொய்ஸ், தமிழாலயம் வூப்பெற்றால் ஆகியனவும் தமிழ்த்திறன் போட்டியில், யேர்மனி தழுவிய மட்டத்தில் தமிழாலயம் முன்சன்கிளட்பாக் இரண்டாம் நிலையைப் பெற்றமைக்கும் பொதுத்தேர்வில் யேர்மனி தழுவிய மட்டத்தில் தமிழாலயம் காகன் இரண்டாம் நிலையையும் தமிழாலயம் முன்சன்கிளட்பாக் மூன்றாம் நிலையைப் பெற்றமைக்கும் தமிழாலயங்கள் தனித்துவமாக அணி அணியாக அரங்கிற்கு வருகைதந்து, தங்கள் மகிழ்வுகளைக் கொண்டாடியதோடு மதிப்பேற்பையும் பெற்றுக்கொண்டன. வெற்றிபெற்ற தமிழாலயங்களைப் பாராட்டிப் பொறுப்பாளர் மற்றும் பிரிவுசார் பொறுப்பாளர்களின் வாழ்த்துரையும் இடம்பெற்றது.

நிறைவாக விழாவைச் சிறப்பாக நடாத்திய இளையோருக்கான மதிப்பளிப்போடு, நன்றியுரையைத் தொடர்ந்து நம்புங்கள் தமிழீழம் என்ற நம்பிக்கையோடு மத்திய மாநிலத்திற்கான அகவை நிறைவு விழா நிறைவுற்றது.

அதேவேளை நான்கு மாநிலங்களின் அகவை நிறைவு விழா 16.04.2022 சனிக்கிழமை தென்மேற்கு மாநிலத்தில் குன்ஸ்ரற்ரன் நகரிலும் 17.04.2022 ஞாயிற்றுக்கிழமை வடமத்திய மாநிலத்தில் ஆன்ஸ்பேர்க் நகரிலும் 24.04.2022 ஞாயிற்றுக்கிழமை வடமாநிலத்தில் பீலபெல்ட் நகரிலும் நிறைவில் 30.04.2022 சனிக்கிழமை தென்மாநிலத்தில் ஸ்ருட்காட் நகரிலும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

  
  
   Bookmark and Share Seithy.com


Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா