Untitled Document
April 2, 2025 [GMT]
  • Welcome
  • Welcome
உறை குளிரில் மானிடத்தை உலுக்கிய மின்னல் செந்தில்குமரனின் MGR 108 இசை நிகழ்வு! Top News
[Thursday 2025-02-06 19:00]

சமீபத்தில் ஈழத்தில் உள்ள எங்கள் சொந்தங்களின் மருத்துவ தேவைகளுக்காக நெடுங்காலமாக தன்னை அர்ப்பணித்து சேவையாற்றி வரும் மின்னல் செந்தில்குமரனின் இசை நிகழ்விற்கு சென்றிருந்தேன். நூறு கோவில்களுக்கு சென்ற மகிழ்ச்சி. ஏன் என்பதனை முழுவதும் படித்த பின் நீங்களும் ஆமோதிப்பீர்கள். ஆறு மணியளவில் மெட்ரோபொலிட்டன் மண்டபம் நிரம்பி வழிந்தது. நிகழ்ச்சியை தொய்வில்லாமல் விறுவிறுப்பாக கொண்டு சென்றார்கள். செந்தில் குமரனோடு வித்தியாசங்கர், சிவா, சந்தியா, மகிசா, விஜிதா, அனோஜனா, அபிராமி, சௌமிகா, கனிஷா, மானசி, ஷியானா, சியாரா என்று ஒரு பட்டாளமே தெரிவு செய்யப்பட்ட ஹிட் பாடல்களை பாடி மக்களின் கரவொலிகளைப் பெற்று கொண்டிருந்தார்கள்.

அருமையான இன்னிசையினை வழங்கிய ஷியானஸ் குழுவினருக்கு பாராட்டுக்கள். இடையிடையே ஒவ்வொரு பாடல்களுக்கும் 70 ஆம் ஆண்டு பாணிகளில் விதவிதமாக உடையணிந்து செந்தில்குமரனும் மற்றோர்களும் ரசிகர்களை மகிழ்வித்து கொண்டிருந்தனர். எம்.ஜி.ஆர் அவர்களின் பாடல்களுக்கு ஏற்றார் போல் வண்ண உடைகள், குறிப்பாக நினைத்தேன் வந்தாய் பாடலுக்கான உடை அதிக விசில்களை பெற்றது என்று கூறலாம். மேடைக்கு பின்னால் இருந்த பெரிய திரையில் பாடப்பட்ட பாடல்களின் ஒரிஜினல் காட்சிகளும் திரையிடப்பட்டது வெகு சிறப்பு. தொகுத்து வழங்கிய அபிஷேகாவும், பிரசாந்தனும் ஒரு புறம் நிகழ்வின் முக்கியத்தினை கூறி கொண்டும் மறுபுறம் கலகலப்புக்குப் பஞ்சமில்லாமல் தங்களுக்கு வழங்கப்பட்ட பணியினை மிகவும் நேர்த்தியாக செய்து கொண்டிருந்தார்கள்.

செந்தில் குமரனின் அம்மா பாடல், வந்த பலரின் மனதில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. நிகழ்வின் இடையில் ஈழத்தின் பல பாகங்களிலிருந்து கிடைக்கப்பெற்ற நோயாளிகளின் மூன்று காணொளிகள் காண்பிக்கப்பட்டன. சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்ட திருமலையைச் சேர்ந்த இளைஞரின் தாயார் தன் மகனின் இளம் குடும்பம் எப்படி ஒரு வேளை சாப்பிட வழியில்லாமல் இருந்த கடந்த கால நிலையினை கூறி சமீபத்தில் வாழ்வாதாரமாக ஒரு தையல் நிலையத்தினை நிவாரண அமைப்பு வழங்கி உதவி புரிந்ததமைக்கு நன்றி கூறினார்.

பாராட்டப்பட வேண்டிய விடயம் என்னவென்றால் இந்த நிகழ்வில் பாடிய சௌமிகா என்பவரே அந்த நிதியினை தன் பிறந்த நாளில் சேர்த்து கொடுத்ததாகும். பின் அடுத்த காணொளிகள் இருதய நோயின் தாக்கத்துடன் அறுவை சிகிச்சைக்காக அரசாங்க மருத்துவமனையில் நீண்ட பட்டியலில் பதிந்து விட்டு மரணத்தை எதிர் நோக்கும் தங்கள் இளம் பிள்ளைகளுக்கு எங்கேனும் ஒரு உதவி கிடைக்காதா என்று ஏங்கும் பெற்றோர்களின் காணொளிகள் திரையிடப்பட்டன. உண்மையில் அவை மனதை உருக்குவதாக இருந்தது. அதன்பின் செந்தில்குமரன் தனது பேச்சில் அதுவரை தானம் தந்தோருக்கு நன்றி தெரிவித்து விட்டு ஒரு வேண்டுதலை வைத்தார். ராமு படத்தில் வரும் கண்ணன் வந்தான் என்ற பிரபல பாடலை தானும் சிவாவும் பாட உள்ளதாகவும், அதன் போது அவையில் யாரேனும் ஐநூறு டொலர்கள் தானம் தர விரும்பும் பட்சத்தில் அங்கு மேடையின் இரு புறமும் பெரிதாக வைக்கப்பட்டிருந்த விளக்கு மாடத்தில் தீபங்களை ஏற்றுமாறும் கோரினார். அடுத்த சில நிமிடங்களில் வார்த்தைகளில் வர்ணிக்க முடியாத உணர்ச்சிபூர்வமான விடயங்கள் நடந்தேறியது.

செந்தில்குமரனும் சிவாவும் கண்ணா கண்ணா என்று உருகி பாட பார்வையாளர்களில் பலர் அணி வகுத்து விளக்குகளை ஏற்றியது எம்மக்களின் தயாள குணத்தினை புடம் போட்டு காட்டியது. சில நேரத்தில் நிகழ்வின் இரு புறமும் தீபங்கள் ஒளி விட்டு பிரகாசித்த காட்சி, நாம் பிறந்த மண்ணில் பல உயிர்களை இந்த நிவாரண நிகழ்வு மீட்டு தர போகின்றது என்ற மகிழ்ச்சியினை ஏற்படுத்தியது.

மொத்தத்தில் விஜய் டிவியில் பார்க்கும் தென்னிந்திய கலைஞர்கள் பங்கு கொள்ளும் நிகழ்வு போன்ற தரமான நிகழ்வாக இருந்தது MGR 108. முழுவதும் திறமை வாய்ந்த எங்கள் உள்ளூர் கலைஞர்கள். ஒளி ஒலி, மேடை அமைப்பு, பாடல் தெரிவு, இசையமைப்பு, நிகழ்ச்சித் தொகுப்பு, பாடியவர்களின் தரம் என்று எல்லாமே உச்சம். இன்னும் சொல்லப்போனால், இப்படி ஒரு தரமான நிகழ்வினை எங்கள் ஈழத்தில் வாழும் உயிர் ஊசலாடும் உறவுகளுக்காக இவர் வருடந்தோறும், கொடுத்து சிவந்த கைகளுக்கு சொந்தக்காரராகிய நடிகர், தமிழகத்தின் முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ராமச்சந்திரனின் பெயரால் செய்வது தான் சிறப்பு.

அதில் இன்னும் சிறப்பு என்னவென்றால் செந்தில் குமரன் தம்பதியினர் இந்த நிகழ்ச்சி நடத்துவதற்கான முழுச் செலவுகளையும் தாங்கள் ஏற்று கொண்டு, அதன் வருமானத்தை முழுமையாக நோயாளிகளின் மருத்துவ தேவைகளுக்கு வழங்குவது. முக்கியமாக, நிதி வரவுகளையும், யாருக்கு நிதி அனுப்பப்பட்டதென்ற விவரங்களையும் வெளிப்படையாக சமூக வலைத்தளங்களில் பகிர்வது. இப்படி உலகில் வேறெங்கும் நடைபெற்றதாக நான் கேள்விப்பட்டதும் இல்லை, அறிந்ததும் இல்லை.

ஒரு குறுகிய காலத்தில் அதுவும் கடும் குளிர் நேரத்தில் நிகழ்ச்சியினை நடத்தி இரண்டு லட்சம் டொலர்களை மக்களிடம் நிதியாக பெற்று எங்கள் அடுத்த சந்ததியினரின் உயிர்களை காப்பற்றுவது போற்றத்தக்க விடயமாகும். கடந்த பல ஆண்டுகளாக இப்படிப் பல நிகழ்வுகளை நடாத்தி, ஈழத்தில் 125 நோயாளிகளுக்கு இதய சத்திர சிகிச்சைகளைப் பொறுப்பெடுத்து அவர்களின் உயிர்களைக் காப்பாற்றியுள்ளார், அவசியம் தேவைப்படும் குருதிச் சுத்திகரிப்பு நிலையங்களை வன்னிப் பரப்பெங்கும் திறந்து வைத்துள்ளார், பல நூற்றுக்கணக்கான வாழ்வாதாரங்களை நோயாளிகளுக்கு வழங்கியுமுள்ளார். செந்தில்குமரனுக்கும் அவரோடு இந்த பணியில் தங்களை இணைத்து நிற்கும் அனைவர்க்கும் வாழ்த்துக்கள். மீண்டும் கூறுகிறேன் நூறு கோவில்களுக்கு சென்ற மகிழ்வுடன் வீடு திரும்பினோம்.

அன்புடன்,
-கந்தையா கனகலிங்கம் யோகநாதன்-

  
  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
Airlinktravel-2020-01-01
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Asayan-Salon-2022-seithy
Latika-Gold-House-2025
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா