Untitled Document
September 21, 2017 [GMT]
  • Welcome
  • Welcome
வழிபாடுகளை மேற்கொள்வதற்காக இந்தியா செல்லும் ஜனாதிபதி மஹிந்த..
[Saturday 2013-01-26 18:00]

வழிபாடுகளை மேற்கொள்ளும் நோக்கில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியா செல்லவுள்ளார். எதிர்வரும் எட்டாம் திகதி இவரது இந்திய விஜயம் அமையுமென்று, இந்திய அதிகாரிகளை மேற்கோள்காட்டி ஐ.ஏ.என்.எஸ் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. புத்தகாயாவில் உள்ள மகாபோதி ஆலயத்தில், இலங்கையின் அமைதி மற்றும், அபிவிருத்திக்காக வழிபாடு நடத்தவே மஹிந்த ராஜபக்ச புத்தகாயா வரவுள்ளதாக இந்திய அதிகாரிகள் கூறியுள்ளனர்.


இலங்கை தொடர்பான அமெரிக்காவின் அணுகுமுறை தவறானது - பாதுகாப்பு செயலாளர் சீற்றம்!
[Saturday 2013-01-26 13:00]

போருக்குப் பிந்திய இலங்கையுடனான அமெரிக்காவின் அணுகுமுறை தவறானது. இரு நாடுகளுக்கும் இடையில் நல்ல உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதற்கு இலங்கை தொடர்பான கொள்கைகளை அமெரிக்கா மீளாய்வு செய்ய வேண்டும் எனப் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்றுமுன்தினம் பாதுகாப்பு அமைச்சில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மேலும் கூறியதாவது: இலங்கை இராணுவ அதிகாரிகளை அமெரிக்கா அநீதியான முறையில் நடத்துகிறது. அவர்கள் செய்வது தவறு என்று அவர்களுக்கு நான் கூற விரும்புகிறேன். ஒவ்வொரு முறையும் அவர்கள் அமெரிக்க இராஜதந்திரிகளும், அதிகாரிகளும் என்னைச் சந்திக்கும் போதும், எமது இராணுவத்துடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும் என்று கூறுகிறார்கள். நான்காவது கட்ட ஈழப்போரின் போது, இலங்கையின் வசதிகளை அமெரிக்க ஆயுதப்படையினர் பயன்படுத்திக் கொள்வதற்கான உடன்பாடு ஒன்று செய்து கொள்ளப்பட்டது.


எரியுண்ட நிலையில் அநாதரவாக கிடந்த யாழ்.பல்கலைக்கழக மாணவி வைத்தியசாலையில் அனுமதிப்பு!
[Saturday 2013-01-26 13:00]

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவி எரிகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ். பல்கலைக்கழகத்தில் கலைப்பீடத்தில் இரண்டாம் தரத்தில் கல்விப்பயிலும் துளசிக்கா (வயது 22 ) என்ற மாணவியே இவ்வாறு எரிகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ். புகையிரத நிலைய வீதியில் எரியுண்ட நிலையிலிருந்த குறித்தமாணவியை மீட்டெடுத்த பிரதேசவாசிகள் அவரை யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். அவரின் நிலைமை மோசமடைந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.


அவுஸ்திரேலிய எதிர்க்கட்சியின் பிரதித் தலைவர் இலங்கை விஜயம்!
[Saturday 2013-01-26 13:00]

அவுஸ்திரேலியாவின் எதிர்க் கட்சி பிரதித் தலைவர் ஜூலி பிஷப் இலங்கைக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். இலங்கை வரும் இவர் இலங்கையில் இடம்பெறும் கடத்தல் சம்பவங்கள் குறித்து கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளை ஞாயிற்றுக்கிழமை இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளும் அவுஸ்திரேலிய எதிர்க்கட்சி பிரதித் தலைவருடன் அவுஸ்திரேலிய எல்லை பாதுகாப்பு பேச்சாளர் மைக்கல் கீனனும் இலங்கை வரவுள்ளார்.அவுஸ்திரேலிய லிபிரர் கட்சியின் பேச்சாளர் பிஷப் இலங்கையில் தமிழ் பிரதேசங்களிற்கான விஜயத்தை மேற்கொண்டு அவர்களுடன் பேசவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


கூட்டமைப்பின் உறுப்பினர்களை அச்சுறுத்தியோ, கொலை செய்தோ தமிழ்த் தேசியத்தை சிதைக்க முடியாது! - அரியநேத்திரன்
[Saturday 2013-01-26 10:00]

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை அச்சுறுத்தியோ அல்லது பழிவாங்கியோ அல்லது கொலை செய்தோ தமிழ்த் தேசியத்தை சிதைக்க முடியாது. இது கடந்த கால வரலாறு. இதனை சிங்களப் பேரினவாதமும், ஒட்டுக்குழுக்களும் புரிந்துகொள்ளவேண்டும். இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார். கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் கிளிநொச்சி அலுவலகம் சி.ஐ.டியினால் இரு தடவைகள் சோதனையிடப்பட்டமை மற்றும் அவரின் ஆதரவாளர்கள் கைதுசெய்யப்பட்டமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


யாரும் காணாமல் போகவில்லை என்றால் உறவுகளைத் தேடி வீதிகளில் அலையும் பெண்களுக்கு விசரா பிடித்துள்ளது? - சம்பந்தன்
[Saturday 2013-01-26 10:00]

இலங்கையில் காணாமல் போனவர்களென்று எவரும் இல்லையென பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய ராஜபக்ச கருத்து தெரிவித்துள்ளார். அப்படியானால் தமது உறவுகளைக் காணாது தெருவழியில் அலைந்து திரியும் பெண்களுக்கு விசரா பிடித்துள்ளது?. இவ்வாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுவின் தலைவர் இரா. சம்பந்தன் கேள்வியெழுப்பியுள்ளார். கைதானவர்கள், சரணடைந்தவர்கள் பெருமளவானோர் காணாமல் போயுள்ளனர். இந்தநிலையில் அரசாங்கத்தின் முக்கிய அதிகாரியொருவர் இவ்வாறு கருத்துக் கூறுவதை என்னவென்று சொல்வது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


இஸ்லாமியர்கள் பற்றிய அரசின் கருத்துக்கு முஸ்லிம் தலைவர்கள் மறுப்பு!
[Saturday 2013-01-26 08:00]

இலங்கையில் இஸ்லாமிய மத அடிப்படைவாதமும் கடும்போக்குவாதமும் தீவிரமடைந்துவருவதாகவும் அதனால் மற்ற சமூகங்கள் பாதிக்கப்படுவதாகவும் பொது பல சேனா என்ற கடும்போக்கு பெளத்த அமைப்பு சுமத்துகின்ற குற்றச்சாட்டை முஸ்லிம் சமூகத் தலைவர்கள் மறுக்கிறார்கள். முஸ்லிம் மக்களுக்கு எதிராக அண்மைக் காலங்களாக நாட்டில் நடந்துவரும் அச்சுறுத்தல் செயற்பாடுகள் தொடர்பில் முஸ்லிம் முஸ்லிம் தலைவர்கள் பொது பல சேனா அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் தெரிவித்திருந்தார்.


ஈழத்தமிழர்களுக்காக நீதிகேட்டு லண்டனிலிருந்து இந்தியா நோக்கிய நடைப்பயணம்!Top News
[Saturday 2013-01-26 08:00]

ஈழத் தமிழர்களது விடுதலைக்கான உரிமைப் போராட்டத்தின் தொடர்ச்சியாக லண்டனில் இருந்து இந்தியா நோக்கி ஈழத்தமிழர்களுக்கான நீதி கேட்டு மனிதநேய நடை பயணம் ஒன்று நடைபெறவுள்ளது. எதிர்வரும் 29 மாலை 6:00 மணிக்கு லண்டன் பாராளுமன்ற சதுக்கத்தில் உள்ள நெல்சன் மண்டேலாவின் உருவச் சிலைக்கு முன்பாக இந்த நடைபயணம் ஆரம்பிக்கவுள்ளது. ஈழத்தமிழர்களின் விடுதலைக்கான நீதி கோரும் நடை பயணங்கள் பல ஏற்கனவே நடந்திருந்தாலும் அவை அத்தனைக்கும் ஏதோ ஒரு அமைப்பின் பின் புலத்திலேயே நடைபெற்றது.ஆனால் இந்த நடை பயணமானது தனி ஒரு மனிதனாக தனது சுய விருப்பில் நடாத்திமுடிக்க தீர்மானித்துள்ளார் சி.லோகேஸ்வரன் என்பவர். ஏனெனில் தற்போது நிலவும் பிளவுகளுக்கு நடுவே தனது இந்த போராட்டம் சிக்கி திசைமாறாமல் இருக்கவும், தனது நோக்கம் சரியான முறையில் நிறைவேற வேண்டும் என்ற நோக்கோடே இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் சி.லோகேஸ்வரன் தெரிவிக்கின்றார்.


அரசியல் செயற்பாடுகளை மட்டுமே மேற்கொள்ள வேண்டும் - கட்சி உறுப்பினர்களுக்கு ரணில் உத்தரவு!
[Saturday 2013-01-26 07:00]

ஐக்கிய தேசியக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் தொகுதி அமைப்பாளர்கள் கட்சியின் அரசியல் செயற்பாடுகளை மட்டுமே முன்னெடுக்கவேண்டும். அதற்கு அப்பால் சென்று தனிப்பட்ட ரீதியிலான வேலைகளை செய்யமுடியாது என்று அக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரம சிங்க அறிவித்துள்ளார். அவ்வாறான செயற்பாடுகளை உடனடியாக கைவிடுமாறு விசேட கட்டளையொன்றை நேற்று விடுத்துள்ளார். கட்சியின் யாப்பின் பிரகாரம் கட்சித்தலைமைத்துவத்திற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாகவே இந்த கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.


தமிழீழ விடுதலைப்புலிகளை தோற்கடிப்பதற்காக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி புஸ்ஸும் ஊக்கமளித்தார் - ஜனாதிபதி!
[Saturday 2013-01-26 07:00]

தமிழீழ விடுதலைப்புலிகளை தோற்கடிக்குமாறு அமெரிக்கா முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஸ் டபிள்யூ புஸ் தம்மிடம் தனிப்பட்ட ரீதியில் ஊக்கமளித்ததாக இலங்கையின் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு விக்கிலீக்ஸில் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் இலங்கைக்கான முன்னாள் தூதர் பெற்றீசியா பியூட்டினியஸ் இலங்கையில் பதவியேற்ற பின்னர் 2009ம் ஆண்டு ஜனாதிபதியுடன் தனிப்பட்ட சந்திப்பை நடத்தினார். இதன்போது தமது கருத்தை வெளியிட்ட மஹிந்த ராஜபக்ச, விடுதலைப்புலிகளை தோற்கடிக்குமாறு அமெரிக்கா தமக்கு ஊக்கமளித்தது.


இலங்கையின் குற்றச்செயல்களை கண்டித்து தூதரகத்தின் முன்பாக போராட்டம்!
[Saturday 2013-01-26 07:00]

இலங்கையில் நடைபெறும் குற்றச்செயல்களை தடுத்து நிறுத்துமாறு இந்திய அரசு இலங்கையை வலியுறுத்தியும் இலங்கையில் தொடர்ந்து நடைபெற்று வரும் போர்க்குற்றங்கள் மற்றும் படுகொலையை கண்டித்தும் எதிர்வரும் 30 ஆம் திகதி முற்றுகை போராட்டம் ஒன்றை நடத்தப்படவிருப்பதாக ஈழ பாதுகாப்பு இயக்க தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்தார்.போர்க்குற்றங்கள் மற்றும் படுகொலைக்கு எதிரான இளைஞர் அமைப்பு சார்பிலேயே சென்னையில் உள்ள இலங்கை தூதரகம் முன்பாக இந்த முற்றுகை போராட்டம் நடைபெறும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.


யுத்த காலத்தில் தமிழர்கள் காணாமற்போனது உண்மையே - வாசுதேவ நாணயக்கார!
[Saturday 2013-01-26 07:00]

இலங்கையின் வன்னியில் இறுதிக்கட்டப் போரின்போது ஏராளமான தமிழர்கள் காணாமல் போனது உண்மையே. இதனை யாரும் மறுக்க இயலாது. எனவே வன்னியில் காணாமல் போன தமிழ்மக்களின் நிலை கண்டறியப்பட வேண்டும் என்று அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் காணாமல் போனவர்களின் உறவுகள் சாட்சியமளித்துள்ளனர். இதனை இராணுவத் தரப்பினர் மறுக்கின்றமை முழுப்பூசினிக்காயை சோற்றுக்குள் மறைப்பது போன்ற செயலாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.


அமெரிக்க இராஜதந்திரிகள் குழு நாளை இலங்கை விஜயம்!
[Friday 2013-01-25 21:00]
அமெரிக்க ராஜதந்திரிகள் நாளைய தினம் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை விஜயத்தை தொடர்ந்து குறித்த அமெரிக்க ராஜதந்திரிகள் மாலைதீவிற்கும் விஜயம் செய்ய உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. அமெரிக்கத் துணை இராஜாங்கச் செயலாளர்களான ஜேம்ஸ் மூர், ஜேம் ஸிம்பர்மன் மற்றும் துணை பாதுகுhப்புச் செயலாளர் விக்ரம் சிங் ஆகியோர் இவ்வாறு இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளனர். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இராணுவ முகாம் அமைப்பதற்காக முள்ளிக்குளம் மக்களை காட்டுக்குள் துரத்திய படையினர்! Top News
[Friday 2013-01-25 19:00]

முள்ளிக்குளத்தில் புதிதாக இராணுவ முகாம் அமைக்கும் பொருட்டு , அப்பகுதி தமிழர்களை வேறு இடத்தில் குடியமருமாறு இலங்கை கடற்படை அதிகாரிகள் எச்சரித்து அத் தமிழர்களை முறையற்ற விதத்தில் காடுகளுக்குள் துரத்தியுள்ளனர் இது தமிழர்கள் மீதான உளவியல் போரின் உச்சகட்டமாகும் , தமிழர்களின் நிலங்களில் இன்று இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன் தமிழர்களின் வாழ்வாதாரத்தை முற்றாக அழிக்கும் வேலையில் ஈடுபட்டிருப்பதாக சிவில் சமூக பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.


35 பவுண் நகைகள் ,15 லட்சம் ரூபா பணத்துடன் காணாமற்போன மனைவியைத் தேடுகிறார் கனடாவில் இருந்த வந்த கணவர்!
[Friday 2013-01-25 19:00]

வடமராட்சி பிரதேசத்தின் அல்வாய் மேற்கு, திக்கத்தைச் சேர்ந்த குடும்பப் பெண்ணொருவர் 35 பவுண் தங்க நகைகள் மற்றும் 15 லட்சம் ரூபா பணத்துடன் காணாமற் போயுள்ளதாக நேற்று வியாழக்கிழமை பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மனைவி காணாமல் போனதையறிந்து கனடாவிலிருந்து வருகை தந்த கணவனே இந்த முறைப்பாட்டைச் செய்துள்ளார். நான்கு வயதுப் பிள்ளையின் தாயாரான க.வசந்தகுமாரி (வயது29) என்பவரே கடந்த வாரம் காணாமற்போயுள்ளார்.


போரில் உதவியதைப்போல பக்கபலமாக இருங்கள், சர்வதேசத்தை நாங்கள் பார்த்துக்கொள்கின்றோம் - மன்மோகனிடம் பீரிஸ் தெரிவிப்பு!
[Friday 2013-01-25 19:00]

தமிழர்களுக்கான அரசியல் தீர்வு வழங்காவிடில் உங்கள் மீது சர்வதேச அழுத்தம் அதிகரிக்கும் எனக் கூறியுள்ள மன்மோகனிடம் பதிலளித்த பீரிஸ் நீங்கள் எங்களுக்கு போரில் உதவியதைப்போல பக்கபலமாக இருங்கள், சர்வதேசத்தினை நாங்கள் பார்த்துக்கொள்கின்றோம் எனக் கூறியுள்ளார். இது குறித்து தெரியவருவதாவது:


இந்திய வெளிவிவகார அமைச்சருடன் சந்திரிக்கா பேச்சு!
[Friday 2013-01-25 18:00]

இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்சித், இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்தரிகா குமாரதுங்கவை சந்தித்துப் பேசியுள்ளார். இச்சந்திப்பு கடந்த புதன்கிழமை புதுடெல்லியில் இடம்பெற்றுள்ளன. சந்திரிகாவுடனான சந்திப்பின் போது, பல்வேறு இருதரப்பு விவகாரங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக, இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.


மட்டக்களப்பில் மீண்டும் தொடர் மழை: மக்கள் வெளியேற்றம்! Top News
[Friday 2013-01-25 18:00]

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக பெய்துவரும் கடும் மழை காரணமாக மாவட்டத்தின் தாழ் நிலப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் பல பகுதிகளில் மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். போரதீவுப்பற்று பிரதேசத்துக்குட்பட்ட பல பகுதிகள் நீரிழ் மூழ்கியுள்ளதுடன் பல்வேறு பகுதிகளுக்கான போக்குவரத்துகளும் துண்டிக்கப்பட்டுள்ளன. மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்துப்பாதை, வெல்லாவெளி -காக்காச்சிவட்டைக்கான போக்குவரத்துப்பாதை ஆனைகட்டியவெளியூடான போக்குவரத்துப்பாதை என்பன துண்டிக்கப்பட்டுள்ளன.


திட்டமிட்ட குழுவொன்று இன முரண்பாடுகளை தூண்டி அரசின் மீது பழி சுமத்த முனைகிறது - கெஹலிய ரம்புக்வெல
[Friday 2013-01-25 18:00]

திட்டமிட்ட குழுவொன்று இன முரண்பாடுகளை தூண்டும் வகையில் செயற்பட்டு வருவதாக ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இன முரண்பாடுகளை தூண்டி அந்தப் பழியை அரசாங்கத்தின் மீது சுமத்தும் முனைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் கடும்போக்குடையவர்களுக்கு ஆதரவளிப்பதாகவும், சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்த அனுமதியளிப்பதாகவும் சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என அவர் தெரிவித்துள்ளார்.


யாழ். குடாநாட்டில் குற்றச் செயல்கள் என்றுமில்லாதவாறு அதிகரித்து செல்கின்றன: பிரதிப் பொலிஸ் மா அதிபர்
[Friday 2013-01-25 18:00]

யாழ். குடாநாட்டில் குற்றச் செயல்கள் என்றுமில்லாதவாறு அதிகரித்துச் செல்வதாகவும் அவற்றைக் கட்டுப்படுத்துவதற்குரிய விசேட பொலிஸ் பொறிமுறை ஒன்று விரைவில் அமைக்கப்படவுள்ளதாக யாழ். பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக் பெரேரா தெரிவித்துள்ளார். யாழ்.பொலிஸ் நிலையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போது இவ்விடையம் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ளார்.


முஸ்லிம்களுக்குள் முரண்பாடுகளைக் கொண்ட பல்வேறு அமைப்புக்கள் உள்ளன - ஜனாதிபதி
[Friday 2013-01-25 18:00]

முஸ்லிம்கள் மத்தியில் மார்க்க ரீதியாக முரண்பாடுகளைக் கொண்ட பல்வேறு அமைப்புகள் இருக்கின்றன. அவற்றுக்கிடையில் அடிக்கடி பிரச்சினைகள் ஏற்படுகின்றன. முஸ்லிம்களுக்கு எதிராக பௌத்த அமைப்புகளால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் தகவல்களைத் திரட்டி வருகின்றனர். அவற்றைக் கொண்டு சம்பந்தப்பட்டவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


மட்டக்களப்பில் பாம்பு மழை - பதட்டத்தில் மக்கள்!
[Friday 2013-01-25 17:00]

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடியின் சில பகுதிகளில் இன்று வெள்ளிக்கிழமை காலை பாம்பு மழை பெய்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர். காத்தான்குடி 6ஆம் குறிச்சி அமானுல்லா வீதி, காத்தான்குடி ஜன்னத் மாவத்தை ஆகிய பகுதிகளிலேயே இப்பாம்பு மழை பெய்துள்ளது. காத்தான்குடி அமானுல்லா வீதியிலுள்ள வீட்டு வளாகமொன்றிலும் ஜன்னத் மாவத்தையிலுள்ள வீட்டு வளாகமொன்றிலுமே இப்பாம்பு மழை பெய்துள்ளது. தான் வளாகத்தில் நின்றுகொண்டிருந்தபோது மழையுடன் சேர்ந்து இரண்டு பாம்புகள் வந்து விழுந்ததாகவும் அதில் ஒரு பாம்பு தனது தோள் மீது விழுந்து ஓடியதாகவும் ஜன்னத் மாவத்தையில் வசிக்கும் பெண்ணொருவர் கூறினார்.


மீள் எழுச்சி எனும் பெயரில் முருங்கன் பகுதியில் 75 சிங்கள குடும்பங்கள் குடியேற்றம்!
[Friday 2013-01-25 17:00]

நானாட்டான் பிரதேச செயலகத்திற்குட்பட்ட முருங்கன் பகுதியில் 75 சிங்கள குடும்பங்கள் கடந்தவாரம் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர்.முன்னார் வவுனியா பிரதான வீதியில் குறித்த 75 குடும்பங்களும் மீள்குடியேற்றம் செய்யப்பட்டு அவர்களுக்கு தேவையான அடிப்படைவசதிகளும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.மீள் எழுச்சித்திட்டக் கிராமம் என்று பெயரில் இந்த மீள்குடியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.அத்துடன் மக்கள் வங்கியின் 50 ஆண்டு நிறைவை முன்னிட்டு வழங்கப்பட்ட வீட்டுத்திட்டத்திலும் பெரும்பாலானவை சிங்கள மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.


'எனது மகள் வாழ்ந்த வீட்டை இடிக்க வேண்டாம்' ரிசானாவின் தாயார் உருக்கமான வேண்டுகோள்!
[Friday 2013-01-25 17:00]

மூதூர் சாபி நகரில் ரிசானா நபீக்கின் பெற்றோருக்கு வீடொன்றை கட்டிக்கொடுப்பதற்கான அடிக்கல் இன்று வெள்ளிக்கிழமை நாட்டப்பட்டது. இராணுவத்தின் 22 ஆவது படையணியின் பிரிகேடியர் அருண வன்னியாராச்சி தலைமையிலேயே இந்த அடிக்கல் நாட்டப்பட்டது. வீட்டு நிர்மானங்களுக்கு பொறுப்பாக இராணுவத்தின் 224 ஆவது படையணி தலைமை அலுவலகத்தின் கர்னல் விக்கும் லியனகே செயற்படுவார். ரிசானாவின் தாயாரான அஹமது செய்யது பரீனா மற்றும் தந்தை மொஹமது சுல்தான் நபீக் ஆகியோரே அடிக்கல்லை நாட்டிவைத்தனர்.


நாவந்துறைக் கடலில் மூழ்கி இளைஞன் ஒருவர் பலி!
[Friday 2013-01-25 13:00]

யாழ்ப்பாணம் நாவந்துறைக் கடலில் குளிக்கச்சென்ற இளைஞன் ஒருவன் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவமொன்று இன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் இன்று முற்பகல் 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மயில்வாகனம் டிலக்ஷன் (22 வயது) என்ற இளைஞனே இவ்வாறு கடலில் மூழ்கி உயிரிழந்தள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இளைஞர்கள் குழுவொன்று படகொன்றில் கடலுக்கு குளிக்கச் சென்றபோது குறித்த இளைஞன் கடலில்தவறி விழுந்துள்ளான். ஏனைய இளைஞர்கள், அவரை மீட்டு யாழ்.வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.


கூட்டமைப்பைப் பலப்படுத்த தமிழர்கள் ஆணை தந்தார்களே தவிர, தமிழரசுக் கட்சி கிளைகளைத் திறக்கவல்ல: - சிவசக்தி ஆனந்தன்
[Friday 2013-01-25 12:00]

கடந்த தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பலப்படுத்த வேண்டும் என்பதற்காக தமிழ் மக்கள் வாக்களித்தார்களே தவிர, தமிழரசுக் கட்சியைப் பலப்படுத்துவதற்காக அல்ல எனத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி வட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், தமிழரசுக் கட்சியின் கியைகளைத் திறப்பதன் மூலமாக கூட்டமைப்பைப் பலப்படுத்தப்போவதாக சம்பந்தன் ஐயா தெரிவித்திருப்பது கூட்டமைப்பை மேலும் பலவீனப்படுத்தும் ஒரு செயலாகவே இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.


ஓன்ராரியோ மாகாண முதல்வரை தெரிவு செய்வதில் முக்கிய பங்கு வதிக்கும் கனடியத் தமிழர்கள். Top News
[Friday 2013-01-25 12:00]

இவ்வார இறுதியில் நடைபெறவுள்ள ஒன்ராரியோ ஆளும் லிபரல் கட்சிக்கான அடுத்த தலைவர் மற்றும் அடுத்த ஒன்ராரியோ முதல்வரை தெரிவு செய்யும் தேர்தல் இவ்வார இறுதியில் ரொரன்ரோ மாநகரின் மத்தியில் அமைந்துள்ள புகழ்வாய்ந்த பழைய மேப்பல் லீவ் திடலில் நடைபெறவுள்ளது. இத் தேர்தலுக்காக ஒன்ராரியோ முழுமையாக தெரிவு செய்யப்பட்ட 1800 தெரிவு செய்யப்பட்ட பேராளர்கள் கூடுகின்றனர். இதில் 60 தமிழர்கள் கனடியத் தமிழர் சமூகம் சாப்பாக போட்டியிட்டு தெரிவு செய்யப்பட்டு தமிழர் சமுகப்பிரதிநிதிகளாக கலந்து கொள்கின்றனர்.


தடம்புரண்டு ஆற்றுக்குள் விழுந்த வாகனத்திலிருந்து 20 பேர் காப்பாற்றப்பட்டனர் - மட்டக்களப்பில் சம்பவம்!
[Friday 2013-01-25 11:00]

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கறுப்புப் பாலத்தின் கீழாகவுள்ள ஆற்றில் வாகனமொன்று வீழ்ந்துள்ளது. இருப்பினும் அவ்வாகனத்தில் பயணம் செய்த 20 பேரும் காப்பற்றப்பட்டுள்ளனர். அம்பாறை, மத்தியமுகாம் பிரதேசத்திலிருந்து அநுராதபுரத்தில் திருமண வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தவர்களின் டொல்பின் ரக வாகனமே இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை ஆற்றில் வீழ்ந்து விபத்திற்குள்ளானது. இவ்வாகனத்தில் பயணித்த 20 பேரும் உயிர் ஆபத்தின்றி வெல்லாவெளிப் பொலிஸாரின் உதவியுடன் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். எவரும் பாரதூரமாக காயமடையவில்லையெனவும் வெல்லாவெளி பொலிஸார் கூறினர்.

SELVI-HOMES-09-02-17
Tharsi-home-15-10-2016
Easankulasekaram-Remax-300716
Mahesan-Remax-169515-Seithy
Elankeeran-debt-solution-25-06-2016
<P>
 <b> 13-08-2017 அன்று ரொரன்டோவில் நடைபெற்ற இசை மாலைப் பொழுது - 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
</p>
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 29ம் 30ம்தி கதிகளில் நடைபெற்ற World Tamil Badminton Federation 5th annual tournament நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா
<b>  கனடா-ரொரன்டோவில்  ஜூலை 7ம் 8ம் 9ம்தி கதிகளில் நடைபெற்ற குதூகலம் 2017 நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள்-குணா